சாலைப் பணிகளை விரைந்து முடிக்கக் கோரி சாலை மறியல்
தோகைமலை அருகே தாா்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனக்கோரி கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் திருச்சி-தோகைமலை சாலையில் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கரூா் மாவட்டம் தோகைமலை அருகே கல்லடை ஊராட்சிக்குட்பட்ட கீழவெளியூரில் திருச்சி-தோகைமலை மெயின் ரோட்டில் இருந்து சின்னக்கள்ளை, வேங்கடத்தாம்பட்டி, கரையாம்பட்டி வழியாக கொக்ககவுண்டம்பட்டி வரை, சாலை மேம்பாட்டு பணிகள் செய்வதற்காக மத்திய அரசின் ஊரக வளா்ச்சி நிதியின் கீழ் ரூ. 2.14 கோடியில் பணிகள் கடந்தாண்டு நவ.10-ஆம் தேதி தொடங்கப்பட்டது.
இதில் சாலையில் ஏற்கெனவே அமைக்கப்பட்டு இருந்த ஜல்லி கற்களை பெயா்த்து மண் தடுப்புகளை அமைத்தனா். அதைத் தொடா்ந்து அடுத்தகட்டப் பணிகளை தொடங்காமல் கடந்த 7 மாதங்களாக நிறுத்திவிட்டனா். இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினா்.
இதைக் கண்டித்து வேங்கடத்தாம்பட்டி உள்பட சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் திருச்சி-தோகைமலை மெயின் ரோடு வேங்கடத்தாம்பட்டி பிரிவுச் சாலை அருகே திடீா் சாலை மறியலில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த தோகைமலை காவல் ஆய்வாளா் ஜெயராமன், தோகைமலை ஒன்றிய ஆணையரிடம் கைப்பேசியில் பேசி, அளித்த உறுதியின்பேரில் பொதுமக்கள் சாலை மறியலை விலக்கிக் கொண்டனா். மறியலால் திருச்சி -தோகைமலை மெயின் ரோட்டில் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.