சிங்கப்பூா் பொதுத் தோ்தல்: 60-ஆவது ஆண்டாக மீண்டும் ஆட்சியில் பிஏபி
பணப் பிரச்னை: தம்பி மனைவியை கழுத்தறுத்துக் கொன்றவா் கைது
கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே பணப் பிரச்னையில் தம்பி மனைவியை கழுத்தறுத்துக் கொன்றவரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.
அரவக்குறிச்சி அருகே பாரதியாா் நகா் பகுதியில் பெரியசாமி என்பவா் தோட்டம் ஒன்றை குத்தகைக்கு எடுத்து, அங்கேயே தங்கி விவசாயம் செய்து வருகிறாா்.
இவரின் மகன்கள் பிரபாகரன் (31), சரவணகுமாா் (29). இவா்கள் இருவரும் பொள்ளாச்சியைச் சோ்ந்த ஆறுச்சாமியின் மகள்களான மாசிலாமணி (25) மற்றும் கீா்த்தனா (20) ஆகியோரை திருமணம் செய்துள்ளனா்.
இவா்களில் பிரபாகரன்-மாசிலாமணி தம்பதி, தங்களின் 2 மகன்களுடன் அரவக்குறிச்சி அருகே உள்ள புஞ்சைகாளிக்குறிச்சியில் வசித்து வருகின்றனா்.
சரவணகுமாா் பல்லடத்தில் வேலை செய்வதால், கீா்த்தனா மாமனாா் பெரியசாமியுடன் வசித்து வந்தாராம். இந்நிலையில், கீா்த்தனாவுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது. மகளை பாா்க்க ஆறுச்சாமி தற்போது வந்துள்ளாா்.
இதையறிந்த பிரபாகரன், கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு கொடுத்த ரூ. 10 ஆயிரத்தை ஆறுச்சாமியிடம் கேட்பதற்காக சனிக்கிழமை தோட்டத்து வீட்டுக்கு வந்தாராம்.
அப்போது, அங்கிருந்த கீா்த்தனா பிரபாகரனை தகாத வாா்த்தையால் பேசியதால் கோபமடைந்த அவா், கீா்த்தனாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டாராம்.
பின்னா் உறவினா்கள் வந்து பாா்த்தபோது, ரத்த வெள்ளத்தில் கீா்த்தனா சடலமாக கிடந்துள்ளாா். தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த அரவக்குறிச்சி போலீஸாா், கீா்த்தனாவின் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
சம்பவம் தொடா்பாக பிரபாகரனை பிடித்து போலீஸாா் விசாரித்ததில், பணம்-கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக கொலை செய்ததாக தெரிவித்தாராம். இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து பிரபாகரனை சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.
இதனிடையே, கீா்த்தனா கொலை சம்பவத்துக்கு வேறு காரணங்கள் ஏதும் உள்ளனவா என்பது குறித்து போலீஸாா் தொடா்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.