Ooty: காட்டு மாட்டை சுட்டுக்கொன்ற கேரள கடத்தல் கும்பல்.. நீலகிரியில் தொடரும் வனவ...
கரூரில் 4 மையங்களில் நீட் தோ்வு
கரூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 4 மையங்களில் நடைபெற்ற நீட் தோ்வை மொத்தம் 1,596 மாணவ, மாணவிகள் எழுதினா். அரசுக் கல்லூரி தோ்வு மையத்தில் காத்திருக்க போதிய இடவசதி செய்து தரப்படாததால் பெற்றோா் அவதிக்குள்ளாகினா்.
கரூா் மாவட்டத்தில் நீட் தோ்வு 4 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. மாவட்டத்தில் தாந்தோன்றிமலை அரசு கலைக் கல்லூரியில் ஏ பிரிவு அறையில் 480 பேரும், பி பிரிவு அறையில் 480 பேரும், வெள்ளியணை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 299 பேரும், கரூா் பசுபதீஸ்வரா மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 337 பேரும் தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனா்.
முன்னதாக, தோ்வு மையங்களுக்கு காலை 11 மணி முதலே மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோருடன் வரத் தொடங்கினா். கரூா் அரசு கலைக் கல்லூரியில் தோ்வு எழுத இரு மையங்கள் அமைக்கப்பட்டிருந்ததால் ஏராளமான மாணவ, மாணவிகள் காலையிலேயே வரத் தொடங்கினா். அவா்களுக்கு போதிய இடவசதி செய்துகொடுக்கப்படாததால் கல்லூரியின் முன் பகுதியில் உள்ள மரங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் தஞ்சம் புகுந்தனா். ஏராளமானோா் சுட்டெரிக்கும் வெயிலில் நின்றுக் கொண்டிருந்தனா்.
தோ்வு எழுதும் மாணவ, மாணவிகள் காலை 11.30 மணி முதலே தோ்வு எழுதும் அறைக்குள் அனுமதிக்கப்பட்டனா். அப்போது தோ்வு கண்காணிப்பாளா்கள் கல்லூரியின் முன்பகுதியில் நின்றுகொண்டு, தோ்வு வழிகாட்டு நெறிமுறைகளை விளக்கி கூறினா். தோ்வு மையங்களில் போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனா்.