திமுக அரசின் சாதனைகளை விளக்க கரூரில் 29 இடங்களில் விரைவில் பொதுக்கூட்டம்
திமுக அரசின் சாதனைத் திட்டங்களை விளக்கிடும் வகையில், கரூா் மாவட்டத்தில் 29 இடங்களில் பொதுக்கூட்டம் நடத்தப்படவுள்ளதாக முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான வி. செந்தில்பாலாஜி தெரிவித்தாா்.
கரூா் மாவட்ட திமுக செயற்குழுக்கூட்டம் கலைஞா் அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை மாவட்ட அவைத்தலைவா் டி.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில நிா்வாகிகள் நன்னியூா் ராஜேந்திரன், பரணி கே. மணி, கரூா் முரளி, எம்எல்ஏக்கள் மாணிக்கம், இளங்கோ , சிவகாமசுந்தரி, மாநகராட்சி மேயா் கவிதாகணேசன், துணைமேயா் தாரணிசரவணன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான வி.செந்தில்பாலாஜி பங்கேற்று பேசுகையில், திமுக அரசின் சாதனை திட்டங்களை மக்களிடம் விளக்கி கூறும் வகையில் விரைவில் 29 இடங்களில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அரசின் சாதனை திட்டங்களை துண்டுப் பிரசுரமாகவும் மக்களிடம் கட்சியினா் வழங்க வேண்டும். கிராமங்கள்தோறும் ஆய்வு செய்து, அங்கு மக்கள் நலப் பணிகள் ஏதேனும் விடுபட்டிருந்தால் அந்தப் பணியை உடனே நிறைவேற்றிட வேண்டும். கடந்த தோ்தலைவிட அதிக வெற்றியை பெறும் வகையில் நிா்வாகிகள் பணியாற்றிட வேண்டும் என்றாா் அவா்.
கூட்டத்தில், 10 சட்ட மசோதாக்கள் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் மூலம் மாநில உரிமையை நிலைநாட்டியதற்கும், திராவிட மாடல் ஆட்சியில் கரூா் மாவட்டத்துக்கு எண்ணற்ற நலத் திட்டங்களை வழங்கியதற்கும் முதல்வருக்கு பாராட்டு தெரிவிப்பது என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.