Nilgiris: பள்ளி மாணவிகள் 5 பேருக்கு பாலியல் வன்கொடுமை; அதிர்ச்சி பின்னணி..
நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவன் 26 வயதான உமேஸ்வரனுக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், ஊர்க்காவல் படையில் சில காலமும், வேட்டைத்தடுப்பு காவலராக சில காலமும் பணியாற்றியுள்ளார்.

அந்த வேலைகளை கைவிட்டுவிட்டு பழங்குடி கிராமம் ஒன்றில் பெட்டிக்கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார்.
கடைக்கு பொருள்கள் வாங்க வரும் பள்ளி மாணவிகளுடன் தவறான எண்ணத்தில் பேசி, பழகி வந்த உமேஸ்வரன், செல்போன் ரீச்சார்ஜ் செய்ய வரும் மாணவிகளின் செல்போன் நம்பர்களை நோட் செய்தும் தொடர்புகொண்டுள்ளார்.
10 - ம் வகுப்பு படிக்கும் 4 மாணவிகள் மற்றும் 8 - ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவி என 5 சிறுமிகளை மூளைச்சலவை செய்து பாலியில் வல்லுறவுக்கு ஆளாக்கி வந்துள்ளார்.
பாலியல் ரீதியாக ஏமாற்றப்படுவதை அறிந்த சிறுமிகள், பெற்றோர் உதவியுடன் குழந்தைகள் பாதுகாப்பு நலத்துறையைத் தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளனர்.

அதன் அடிப்படையில் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், 5 பழங்குடி சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி வந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உமேஸ்வரன் மீது போக்ஸோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். போலீஸார் இந்த கொடூரம் குறித்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து தெரிவித்த காவல்துறையினர், "திருமணமானதை மறைத்து சிறுமிகளை மூளைச்சலவை செய்திருக்கிறான். திருமணம் செய்துகொள்வதாக பல ஆசை வார்த்தைகளைச் சொல்லி பாலியல் வல்லுறவில் ஈடுபட்டு வந்திருக்கிறான்.

ஒருவருக்கு ஒருவர் தெரியாத வகையில் 5 சிறுமிகளை ஏமாற்றி வந்திருக்கிறான். பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்றனர்.