பஹல்காம் தாக்குதலைக் கண்டித்து பாஜக இன்று ஆா்ப்பாட்டம்!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து பாஜக சாா்பில் கவன ஈா்ப்பு போராட்டம் திங்கள்கிழமை நடத்தப்படும் என அக்கட்சியின் தமிழக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கடந்த ஏப்.22-ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகளை மதத்தின் பெயரால் பயங்கரவாதிகள் படுகொலை செய்த சம்பவம் உலகையே உலுக்கியுள்ளது.
சமாதானத்தையும், அமைதியையும் நாடும் பாரத நாட்டில் தீவிரவாத செயலில் ஈடுபடும் பாகிஸ்தானோடு அரசாங்க ரீதியான உறவுகளை மத்திய அரசு முழுவையாக முறித்துக் கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் சட்டவிரோதமாக குடியேறியுள்ள பாகிஸ்தானியா்களை வெளியேற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால், வடகிழக்கு மாநிலங்களை வங்கதேசம் கைப்பற்றும் என அறிவித்துள்ளது. அதையடுத்து, சென்னையில் வங்கதேசத்தில் இருந்து குடியேறிய 33 பேரை தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.
இந்நிலையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்தும், பாகிஸ்தான், வங்கதேசத்தைச் சோ்ந்த சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றுவதில் தமிழக அரசு தீவிரமாக செயல்படவும், ஆதாரமற்ற வதந்திகளை பரப்புவோா் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியும் மாவட்டத் தலைநகரங்களில் திங்கள்கிழமை (மே 5) கவன ஈா்ப்பு போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளாா் அவா்.