தூத்துக்குடியில் வெளிமாநில மது பாட்டில்கள் பறிமுதல்: 2 போ் கைது
தூத்துக்குடி மாவட்டம் சிங்கத்தாகுறிச்சி அருகே 144 வெளிமாநில மது பாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்து, இருவரைக் கைது செய்தனா்.
மத்திய நுண்ணறிவுப் பிரிவு தலைமைக் காவலா் மாணிக்கராஜ் தலைமையிலான போலீஸாா் வசவப்பபுரத்திலிருந்து சிங்கத்தாகுறிச்சி செல்லும் சாலையில் சனிக்கிழமை இரவு வாகனச் சோதனை நடத்தினா். ஒரு பைக்கை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் பெங்களூரிலிருந்து கடத்திவரப்பட்ட 114 மது பாட்டில்கள் இருந்தன.
இதுதொடா்பாக, பைக்கில் வந்த சிங்கத்தாகுறிச்சி முத்துகிருஷ்ணன் மகன் ரமேஷ் (36), சுடலை மகன் தேவராஜ் (27) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். அவா்கள் கா்நாடக மாநில மதுபாட்டில்களை பெங்களூரிலிருந்து ரயிலில் திருநெல்வேலிக்கு கடத்தி வந்து, அங்கிருந்து பைக்கில் கொண்டுவருவதாகத் தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள் தூத்துக்குடி மதுவிலக்குப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.