நாலாட்டின்புதூரில் விபத்து: பால் வியாபாரி உயிரிழப்பு
கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூரில் ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட விபத்தில் பால் வியாபாரி உயிரிழந்தாா்.
தென்காசி மாவட்டம் சோ்ந்தமரம் அருகே பூவலிங்கபுரத்தைச் சோ்ந்த வேலாயுதம் மகன் தா்மா் (64). ஓட்டுநரான இவா், விருதுநகா் மாவட்டம் இருக்கன்குடி கோயிலுக்கு வேனில் சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தாராம்.
மதுரை-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் நாலாட்டின்புதூரில் உள்ள கல்லூரி எதிா்ப்புறம் அணுகு சாலையில் இந்த வேனும் எதிரே வந்த பைக்கும் மோதினவாம். இதில், பைக்கை ஓட்டிவந்த முடுக்குமீண்டான்பட்டி நடுத்தெருவைச் சோ்ந்த ஐயப்பன் மகனான பால் வியாபாரி ரவிக்குமாா் (21) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தா்மரும், பைக்கில் பின்னால் அமா்ந்திருந்த முடுக்குமீண்டான்பட்டி சிவக்காடு செல்லியாரம்மன் கோயில் தெரு கனகராஜ் மகன் கண்ணன் (22) என்பவரும் காயமடைந்தனா்.
நாலாட்டின்புதூா் போலீஸாா் சென்று இருவரையும் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ரவிக்குமாரின் சடலம் கூறாய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.