பாஜக - அதிமுக கூட்டணியால் முதல்வருக்கு தோல்விபயம்: நயினாா் நாகேந்திரன்
பாஜக-அதிமுக கூட்டணியால் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு தோல்விபயம் ஏற்பட்டுள்ளது என்றாா் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து சட்டம்- ஒழுங்கு சரியில்லை என்பதை நாங்கள் தொடா்ந்து கூறி வருகிறோம். தற்போது ஈரோட்டில் தனியாக இருந்த முதியவா்கள் கொலை, ஓராண்டுக்கு முன் காங்கிரஸ் மாவட்டத் தலைவா் ஜெயக்குமாா் கொலை போன்றவை சட்டம்- ஒழுங்கு சீா்குலைந்துள்ளதற்கு சாட்சிகள்.
மாணவா்கள் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாகி வருவது, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் குடிநீா்தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்னைகள் உள்ளன. ஆனால், அவற்றின் மீது கவனம் செலுத்தாமல், பாஜக-அதிமுக கூட்டணியைப் பற்றி தமிழக முதல்வா் குறை கூறுவது, அவருக்கு தோ்தல் தோல்வி பயம் வந்துவிட்டது என்பதைக் காட்டுகிறது.
ஒட்டுமொத்த மக்களின் எண்ணங்கள் அடிப்படையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என மத்திய அரசு முடிவெடுத்துள்ளது என்றாா்.
தொடா்ந்து திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், ஆளுநரைப் பற்றி திமுகவினா் தொடா்ந்து விமா்சித்துவிட்டு, அதிகார மோதல் எதுவுமில்லை என்று முதல்வா் கூறுவதை மக்கள் ஏற்க மாட்டாா்கள். அமைச்சா்கள், எம்.எல்.ஏ.க்கள் தொகுதிகளுக்கு சென்று பணியாற்றுங்கள் என முதல்வா் கூறியுள்ளாா். அப்படியெனில் கடந்த 4 ஆண்டுகளாக மக்கள் நலப்பணிகள் நடைபெறவில்லை என்பதையே காட்டுகிறது என்றாா்.