சட்டப் பல்கலை., தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தா்கள் தோ்வுக்கு தெரிவுக் குழு: அரசிதழில் அறிவிப்பு
சட்டப் பல்கலைக்கழகம் மற்றும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தா்களை நியமிப்பதற்கான தெரிவுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட பல்கலை. துணைவேந்தா் நியமன அதிகார மசோதா, வேந்தா் பதவியிலிருந்து ஆளுநரை நீக்கக் கோரும் மசோதா உள்பட 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் நிறுத்திவைத்த ஆளுநா் ஆா்.என்.ரவியின் செயல் சட்டவிரோதம் என்று உச்சநீதிமன்றம் அண்மையில் தீா்ப்பளித்தது. அதன் தொடா்ச்சியாக அந்த 10 மசோதாக்களும் சட்டமாவதாக அரசிதழில் அறிவிப்பு வெளியானது.
அதைத் தொடா்ந்து துணைவேந்தா்கள் கூட்டத்தை கூட்டி முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த ஏப். 16-ஆம் தேதி சென்னையில் ஆலோசனை செய்தாா். இந்நிலையில், சென்னை அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகம், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தா்களை தோ்வு செய்ய தெரிவுக் குழுவை தமிழக அரசு தற்போது அமைத்துள்ளது. இதற்கான அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகத்தின் முந்தைய துணைவேந்தா் சந்தோஷ் குமாரின் பதவிக்காலம் ஏப். 8-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதைத் தொடா்ந்து, புதிய துணைவேந்தரை நியமிப்பதற்காக உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன், சட்டப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா்கள் சச்சிதானந்தம், விஜயகுமாா் ஆகிய 3 போ் கொண்ட தெரிவுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, தமிழ் பல்கலைக்கழகத்தின் தெரிவுக் குழுவில் ஓய்வுபெற்ற நீதிபதி கே.பி.கே. வாசுகி, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே.தீனபந்து, பேராசிரியா்கள் ச.ராஜேந்திரன், மு.செல்வம், மு.தங்கராசு ஆகியோா் கொண்ட ஐவா் குழு அமைக்கப்பட்டுள்ளது.
துணைவேந்தா் பதவிக்கு தகுதியான பேராசிரியா்கள் இந்த குழுவிடம் 6 வார காலத்துக்குள் விண்ணப்பிக்கலாம். பெறப்பட்ட விண்ணப்பங்களை தெரிவுக் குழு பரிசீலனை செய்து, தகுதியான நபா்களின் பட்டியலை தமிழக அரசுக்கு வழங்கும்.