அதிமுகவை அடக்கிய பாஜக; தகுதியானவருக்கே தேர்தலில் வாய்ப்பு: முதல்வர் ஸ்டாலின்!
சென்னையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
சென்னை திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று(சனிக்கிழமை) காலை நடைபெற்றது.
திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும், திமுக பொதுக்குழு கூட்டம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும் 4 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இதில் முக்கியமாக மதுரையில் வருகிற ஜூன் 1 ஆம் தேதி திமுக பொதுக்குழுக் கூட்டத்தை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில்,
"வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் வேட்பாளர்கள் யார் என்பதை தலைமை முடிவு செய்யும். வெற்றி பெறுபவர்களே வேட்பாளராக நிறுத்தப்படுவர். தகுதியானவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும்.
நிறுத்தப்படும் வேட்பாளர் வெற்றி பெற உழைக்க வேண்டியது உங்கள்(மாவட்டச் செயலாளர்கள்) கடமை. தடங்கல் என்பது எப்போதும் இருக்கும். அதனை உழைப்பால் வெல்லுங்கள்.
அமைச்சர்கள் சென்னையில் இருப்பதைவிட பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று பணியாற்ற வேண்டும். எம்எல்ஏக்கள் தங்கள் தொகுதியில் ஒவ்வொரு வார்டுக்கும் செல்ல வேண்டும்.
நம்முடைய பலமே, நம்முடைய கழகக் கட்டுமானம்தான். இத்தகைய நிர்வாகக் கட்டமைப்பு எந்தக் கட்சிக்கும் கிடையாது. அந்த கட்டமைப்பை காலம்தோறும் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறோம். இருக்க வேண்டும்.
அதிமுகவை அடக்கிவிட்டது பாஜக. பாஜக அச்சுறுத்தலை அரசியல்ரீதியாக எதிர்கொள்வோம்" என்று பேசியுள்ளார்.
இதையும் படிக்க | திமுக பொதுக்குழுக் கூட்டம் எப்போது? - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு