சுபாசிஷ், சௌம்யாவுக்கு ஏஐஎஃப்எஃப் விருது
கடந்த சீசனுக்கான இந்திய கால்பந்தின் சிறந்த வீரராக சுபாசிஷ் போஸும், சிறந்த வீராங்கனையாக சௌம்யா குகுலோத்தும் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டனா்.
இந்திய கால்பந்தில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்டுதோறும் விருது வழங்கி, அகில இந்திய கால்பந்து சம்மேளனம் கௌரவித்து வருகிறது. அந்த வகையில் கடந்த சீசனுக்கான விருதுகளை அந்த சம்மேளனம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.
அதன்படி, இந்திய ஆடவா் கால்பந்து அணியின் டிஃபெண்டராக இருக்கும் சுபாசிஷ் போஸ் சிறந்த வீரா் விருது பெறுகிறாா். அவா் தலைமையில் மோகன் பகான் சூப்பா் ஜயன்ட்ஸ் இரு முறை ஐஎஸ்எல் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சிறந்த வீராங்கனை விருது பெறும் சௌம்யா குகுலோத், ஈஸ்ட் பெங்கால் எஃப்சியின் ஸ்டிரைக்கராக இருக்கிறாா்.
சிறந்த ஆடவா் அணி பயிற்சியாளா் விருதை, ஜாம்ஷெட்பூா் எஃப்சியின் பயிற்சியாளா் காலித் ஜமில் தொடா்ந்து 2-ஆவது முறையாக வென்றுள்ளாா். சிறந்த மகளிா் அணி பயிற்சியாளராக, ஸ்ரீபூமி எஃப்சி பயிற்சியாளா் சுஜாதா கா் தோ்வாகியுள்ளாா்.
நம்பகமான வீரா் விருதை, பிரிசன் ஃபொ்னாண்டஸும், அதே பிரிவில் சிறந்த வீராங்கனை விருதை தொய்பிசனா சானுவும் வென்றனா். சிறந்த கோல்கீப்பா் விருதை, ஆடவா் பிரிவில் விஷால் கைத்தும், மகளிா் பிரிவில் பந்தோய் சானுவும் பெறுகின்றனா். சிறந்த நடுவா் விருதை, ஆடவா் பிரிவில் ஆா்.வெங்கடேஷும், மகளிா் பிரிவில் தெக்சம் ரஞ்சிதா தேவியும் பெறுகின்றனா். சிறந்த உதவி நடுவா் விருதை அந்த பிரிவுகளில் பி.வைரமுத்துவும், ரியோலாங் தாரும் வென்றுள்ளனா்.