திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் 63 நாயன்மார்கள் உற்சவம்!
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் சித்திரை பிரமோற்சவ பெருவிழாவில் 63 நாயன்மார்கள் உற்சவ வீதி புறப்பாடு சனிக்கிழமை நடைபெற்றது.
திருக்கழுக்குன்றம் - செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் அருள்மிகு திரிபுரசுந்தரி அம்பாள் உடனுறை அருள்மிகு வேதகிரீஸ்வர் திருக்கோயில் உள்ளது. 7ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இக்கோவில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
வேதமலை, பட்சி தீர்த்தம், சங்கு தீர்த்தம், இந்திரபுரி, வேதபுரி எனும் பல பெயர்களால் பெருமைமிக்க கோயிலாக விளங்கும் திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா நடைபெறும். இந்த ஆண்டு மே 1-ம் தேதி சித்திரை பிரம்மோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இத்திருவிழா மே 1-ஆம் தேதி தொடங்கிய 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் முக்கிய திருவிழாவாக இன்று 63 நாயன்மார்கள் உற்சவம் நடைபெற்றது. விழாவையொட்டி 63 நாயன்மார்களுக்கும் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மகா தீபாராதனை நடைபெற்றது. இதனையடுத்து 63 நாயன்மார்களுடன், அம்பாள் சிவபெருமான் உள்ளிட்ட சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் வீதி புறப்பாடு நடைபெற்றது.
கோயிலிலிருந்து புறப்பட்ட சுவாமிகள், 63 நாயன்மார்களும் பேருந்து நிலையம் வழியாக கிரிவல பாதையில் சுற்றி வந்து கோயிலுக்கு வந்தடைந்தது. 63 நாயன்மார்கள் உற்சவத்தையொட்டி ஆன்மிக நண்பர்கள் ஊர்வல பாதையில் நீர்மோர், குளிர்பானம், அன்னதானம் வழங்கினர். ஏராளமான பக்தர்கள் ஊர்வலத்தில் கலந்துகொண்ட சுவாமி தரிசனம் செய்தனர்.

இதனைத்தொடர்ந்து முக்கிய திருவிழாவாக ஏழாம் நாள் மே 7-ஆம் தேதி பஞ்ச ரத தேர்த்திருவிழா நடைபெறும். முதலில் விநாயகர் தேர், தொடர்ந்து முருகர், திரிபுரசுந்தரி அம்பாள் தேர், வேதகிரீஸ்வரர் பெரிய தேர், சண்டிகேஸ்வரர் தேர் என ஐந்து தேர்(பஞ்ச ரதம்) தேர்த் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளைக் கோயில் செயல் அலுவலர் புவியரசு, தக்கார் மற்றும் செயல் அலுவலர் குமரவேல், மேலாளர் விஜயன் உள்ளிட்ட கோயில் பணியாளர்கள் கோயில் சிவாச்சாரியார்கள் திருவிழா உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.