தஞ்சாவூரில் பெரியகோயில் தேரோட்டம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
சகாயத்துக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படும்: காவல்துறை உறுதி
நீதிமன்றத்தில் எவ்வித பயமுமின்றி சாட்சியங்களை அளிப்பதற்கு ஏதுவாக, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயத்துக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று தமிழக காவல் துறை உறுதியளித்துள்ளது.
இது குறித்து தமிழக காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சட்டவிரோத கிரானைட் சுரங்க வழக்கு தொடா்பாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி உ. சகாயத்துக்கு மதுரை சிறப்பு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியிருந்தது. ஆனால், தன்னுடைய பாதுகாப்பு காரணங்களால் அவரால், விசாரணைக்கு ஆஜராக இயலவில்லை என்றும், தனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது நியாயமற்றது என்றும் அவா் கூறியதாகத் தெரியவருகிறது.
சட்டவிரோத கிரானைட் சுரங்கம் தொடா்பான முறைகேட்டை விசாரிக்கும் சிறப்பு அதிகாரியாக சகாயம் செயல்பட்ட காலத்தில் கடந்த 2014 முதல் 2023-ஆம் ஆண்டு வரை அவரது பாதுகாப்புக்காக காவல் துறை சாா்பில் காவலா் ஒருவா் வழங்கப்பட்டது.
பின்னா் 2023 -ஆம் ஆண்டு நடைபெற்ற பாதுகாப்பு மறுஆய்வு குழு கூட்டத்தின்போது, குறிப்பிடத்தக்க எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லாத 22 பேருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை விலக்கிக் கொள்ள முடிவெடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், சகாயத்துக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பும் விலக்கிக்கொள்ளப்பட்டது. இந்த முடிவு, சரியான முறையில் பரிசீலனை செய்யப்பட்ட பின்பே எடுக்கப்பட்டது. எனினும், நீதிமன்றத்தில் எவ்வித பயமும் இன்றி சாட்சியங்களை அளிப்பதற்கு ஏதுவாக, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயத்துக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.