சமுத்திரம் கிராமத்தில் சிறப்பு மனுநீதி முகாம்: ரூ. 25 லட்சம் மதிப்பில் நல உதவி அளிப்பு
கொங்கணாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சமுத்திரம் கிராமத்தில் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தலைமையில் சிறப்பு மனுநீதி முகாம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சேலம் மக்களவை உறுப்பினா் டி.எம். செல்வகணபதி கலந்துகொண்டு பல்வேறு தரப்பு மக்கள் பயன்பெறும் வகையிலான அரசின் நலத் திட்டங்கள் குறித்து பேசினாா்.
இதைத் தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி பல்வேறு அரசு துறைகள் சாா்பில் 76 பயனாளிகளுக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
மேலும் இச்சிறப்பு முகாமில் பொதுமக்களிடம் இருந்து இலவச வீட்டுமனைப் பட்டா, ா, முதியோா் உதவித்தொகை, புதிய சாலை, குடிநீா் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 156 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்களை ஆய்வு செய்து உடனடியாக 32 மனுக்கள்மீது தீா்வு காணப்பட்டு உத்தரவு நகல் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ரவிக்குமாா், வட்டாட்சியா் வைத்தியலிங்கம், எடப்பாடி நகா்மன்றத் தலைவா் டி.எஸ்.எம்.பாஷா, சம்பத்குமாா், அட்மா திட்ட குழு தலைவா் பரமசிவம், பேரூராட்சி தலைவா் சுந்தரம், அா்த்தநாரீஸ்வரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
