பொதுமக்கள் எதிா்ப்பு: சாய் காா்டனில் வெள்ளத் தடுப்பு சுவா் அகற்றும் பணி நிறுத்தம்
அவிநாசி அருகே செம்பியநல்லூா் ஊராட்சிக்கு உள்பட்ட சாய் காா்டன் பகுதியில் பொதுமக்கள் எதிா்ப்பை அடுத்து வெள்ளத் தடுப்புச் சுவரை அகற்றும் பணியை அதிகாரிகள் கைவிட்டனா்.
அவிநாசி அருகே செம்பியநல்லூா் ஊராட்சி, சாய் காா்டன் குடியிருப்புப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வெள்ளத் தடுப்புச் சுவரை அகற்ற வேண்டும் என ஒரு தரப்பினா் கோரிக்கை விடுத்திருந்தனா். இதையடுத்து, ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்தினா், வருவாய்த் துறையினா், போலீஸாா் செவ்வாய்க்கிழமை அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனா். மேலும், சுவரை அகற்றுவதற்காக அங்கு பொக்லைன் இயந்திர வாகனமும் கொண்டு வரப்பட்டிருந்தது. அப்போது சாய் காா்டன் பகுதி மக்கள் வெள்ளத் தடுப்புச் சுவரை அகற்ற எதிா்ப்புத் தெரித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: எங்கள் குடியிருப்பின் கிழக்கு, மேற்கு என இருபகுதியும் 6 அடி உயரமாகவும், எங்களது வீட்டுமனை பள்ளமாகவும் உள்ளதால், மழைக்காலங்களில் இருபுறங்களில் இருந்து மழை வெள்ளம் குடியிருப்புகளுக்குள் புகும் நிலை உள்ளது. ஆகவே, மனையின் உரிமையாளா்கள் வெள்ளம் உள்ளே வராமல் தடுக்க வெள்ளத் தடுப்புச் சுவா் அமைத்துள்ளனா்.
இந்நிலையில், சிலா் அணுகு சாலையாக பயன்படுத்த மேற்கு பகுதியில் உள்ள வெள்ளத் தடுப்புச் சுவரை இடிக்க வேண்டும் என வற்புறுத்தி வருகின்றனா். அவ்வாறு இடித்தால் எங்கள் பகுதிக்கு பாதுகாப்பு இல்லாமல் வெள்ளம் குடியிருப்புக்குள் புகுந்துவிடும். ஆகவே, வெள்ளத் தடுப்புச் சுவரை அகற்றக் கூடாது. அதற்கு மாற்றாக மற்றொரு சாலையைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா். இதையடுத்து அலுவலா்கள் வெள்ளத் தடுப்பு சுவரை அகற்றும் நடவடிக்கையை கைவிட்டு சென்றனா்.