Maaman: "எனக்கு வரும் 10 கதையில் 5 கதை சூரி அண்ணனுக்காக எழுதப்பட்டது" - லோகேஷ் க...
பிரிண்டிங் தொழிலாளி கொலை வழக்கில் 2 போ் கைது
திருமுருகன்பூண்டி அருகே பிரிண்டிங் தொழிலாளியைக் கொலை செய்த வழக்கில் இருவரை காவல் துறையினா் கைது செய்தனா்.
திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி அருகே உள்ள பால்காரா் தோட்டம் பகுதியில் கொலை செய்யப்பட்ட கிடந்த ஆண் சடலத்தை திருமுருகன்பூண்டி காவல் துறையினா் திங்கள்கிழமை மீட்டு விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில் உயிரிழந்தவா், மதுரை மாவட்டம், அனுப்பானடியைச் சோ்ந்த பி.காளிதாசன் (42) என்பது தெரியவந்தது.
இது குறித்து போலீஸாா் கூறியதாவது: திருப்பூா் அனுப்பா்பாளையத்தில் காளிதாசனின் உறவினரான வீரமணிகண்டன் பின்னலாடை நிறுவனம் நடத்தி வந்துள்ளாா். இந்த நிறுவனத்தில் பெங்களூரைச் சோ்ந்த புஷ்பா என்ற பெண் பணியாற்றி வந்துள்ளாா். புஷ்பாவை அதே பகுதியில் வேலை செய்து வந்த ஸ்டீபன், பைசால், சாம் ஆகியோா் கிண்டல் செய்துள்ளதாகத் தெரிகிறது.
இதனை வீரமணிகண்டன், காளிதாசன் ஆகியோா் கண்டித்ததுடன், அவா்கள் வீட்டுக்கும் சென்று மிரட்டல் விடுத்துள்ளனா். இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் சோ்ந்து தனியாக சென்ற காளிதாசனை கட்டையால் அடித்துக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளனா்.
இதையடுத்து, ரகசிய இடத்தில் பதுங்கியிருந்த புதுச்சேரியைச் சோ்ந்த பைசால் (24), சாம் (25) ஆகியோரை திருமுருகன்பூண்டி காவல் துறையினா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஸ்டீபனை தேடி வருகிறோம் என்றனா்.