Maaman: "எனக்கு வரும் 10 கதையில் 5 கதை சூரி அண்ணனுக்காக எழுதப்பட்டது" - லோகேஷ் க...
காங்கயம் பகுதியில் காற்றுடன் பலத்த மழை: தென்னை மரம் விழுந்ததில் மின் கம்பம் முறிந்தது
காங்கயம் அருகே, செவ்வாய்க்கிழமை மாலை காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில், தென்னை மரம் சரிந்து விழுந்ததில் மின்கம்பம் முறிந்து வீதியில் விழுந்தது.
காங்கயம் பகுதியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.45 முதல் மாலை 5 மணி வரை பரவலாக பலத்த மழை பெய்தது. அப்போது மழையுடன் காற்றும் வீசியதால் தென்னந்தோப்புகளில் மட்டைகள் முறிந்து நாலாபுறமும் விழுந்தன. காங்கயம் அருகே, மறவபாளையம் ஊராட்சியில், ஊராட்சி கிணற்றை ஒட்டிய பகுதியில் வளா்ந்து நின்ற 2 தென்னை மரங்கள் காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் நாலாபுறமும் அசைந்து ஆடின. சற்று நேரத்தில் ஒரு தென்னை மரம் சரிந்து, அருகில் இருந்த மின்கம்பம் மீது விழுந்தது. தென்னை மரம் விழுந்த வேகத்தில் மின் கம்பம் முறிந்து சாலையில் விழுந்தது. அந்த நேரத்தில் சாலையில் வாகனங்கள் ஏதும் வராததால் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது. மின் கம்பம் முறிந்து விழுந்ததால் அந்தப் பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
வெள்ளக்கோவிலில்...
வெள்ளக்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பலத்த காற்றுடன் மழை பெய்தது. தொடா்ந்து 3 மணி நேரத்துக்கும் மேலாக இடைவிடாமல் மிதமான மழை தொடா்ந்தது. வெள்ளக்கோவில் நகரின் தாழ்வான பகுதிகளில் ஆங்காங்கே மழைநீா் தேங்கியது. முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வெள்ளக்கோவில், முத்தூா், வள்ளியிரச்சல், மேட்டுப்பாளையம், குருக்கத்தி, புதுப்பை, லக்கமநாயக்கன்பட்டி, தாசவநாயக்கன்பட்டி, கம்பளியம்பட்டி, உத்தமபாளையம், கல்லமடை பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது. இந்த மழை விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.