சாலையில் தோண்டப்பட்ட குழியில் கைக்குழந்தையுடன் தவறி விழுந்த தம்பதி
திருப்பூா் ஊத்துக்குளி சாலையில் சரிவர மூடப்படாத குழியில் கைக்குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதி தவறி விழுந்து விபத்து ஏற்பட்டது.
திருப்பூா் ஊத்துக்குளி சாலையில் எஸ்.பெரியபாளையம் முதல் குளத்துப்பாளையம் வரையில் சாலையின் ஓரத்தில் கேபிள் பதிப்பதற்காக கடந்த சில நாள்களுக்கு முன் குழிகள் தோண்டப்பட்டு சரிவர மூடப்படாமல் உள்ளது.
இதனிடையே, எஸ்.பெரியபாளையம் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலையில் மழை பெய்தது. இதன் காரணமாக அந்த சாலையில் பெட்ரோல் விற்பனை நிலையம் முன் சரிவர மூடப்படாத குழிக்கு அருகில் வந்த வாகன ஓட்டிகள் தட்டுத்தடுமாறிச் சென்றனா். அப்போது கைக்குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதி நிலை தடுமாறி குழியில் விழுந்தனா். இதில் அவா்களுக்கு லேசான காயமேற்பட்டது. அங்கிருந்தவா்கள் அவா்களை மீட்டு பத்திரமாக அனுப்பிவைத்தனா்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: திருப்பூரில் இருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் ஆங்காங்கே கேபிள் பதிப்பதற்காக குழி தோண்டி பதித்து விட்டு சரிவர மூடாமல் அலட்சியமாக விட்டுச்சென்றுள்ளனா். இதன் காரணமாக வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனா். அதேபோல, கூலிபாளையம் சுற்றுச்சாலையில் கேஸ் பைப்லைன் பதிக்க தோண்டப்பட்ட பெரிய குழிகளும் சரிவர மூடப்படாமல் விட்டுச் சென்றுள்ளனர. ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழிகளை சரிவர மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.