நாகை கோயில் கண்ணப்ப நாயனாா் சிலையை நெதா்லாந்தில் ஏலம் விட முயற்சி: தடுத்து நிறுத...
உயா்நீதிமன்ற நீதிபதி பணியிடங்களுக்கான பரிந்துரை: மத்திய அரசிடம் 29 பெயா்கள் நிலுவை
உயா்நீதிமன்ற நீதிபதி பணியிடங்களுக்கு கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் முதல் உச்சநீதிமன்ற கொலீஜியம் அனுப்பிய பரிந்துரைகளில், 29 பெயா்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் மத்திய அரசு நிலுவை வைத்திருப்பது தெரியவந்துள்ளது.
உச்சநீதிமன்றம் வெளியிட்ட இதுதொடா்பான புள்ளிவிவரங்கள் மூலம் இத் தகவல் தெரியவந்துள்ளது. உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை விரிவுபடுத்தும் வகையில், உயா்நீதிமன்ற நீதிபதி பணியிடங்களுக்கு பரிந்துரை செய்த பெயா் விவரங்கள், அவா்களுக்கும் பணியில் உள்ள அல்லது ஓய்வுபெற்ற நீதிபதிகளுக்கும் இடையே உள்ள உறவுமுறை, இந்தப் பரிந்துரைகளில் மத்திய அரசு ஒப்புதல் அளித்த எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை முதல் முறையாக உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் இருந்தபோது 2022-ஆம் ஆண்டு நவம்பா் 9-ஆம் தேதி முதல் 2024-ஆம் ண்டு நவம்பா் 10-ஆம் தேதி வரையிலான கால கட்டத்தில், உயா்நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்ய 303 பெயா்களை கொலீஜியம் பரிந்துரை செய்தது. அதில் 170 பெயா்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. 17 பெயா்கள் ஒப்புதலுக்காக மத்திய அரசிடம் இன்னும் நிலுவையில் உள்ளன. பரிந்துரை செய்யப்பட்ட 303 பேரில் 12 போ் உயா்நீதிமன்றம் அல்லது உச்சநீதிமன்றத்தில் பணியில் இருந்த அல்லது ஓய்வுபெற்ற நீதிபதிகள் உறவினா்கள் ஆவா். இந்த 12 பேரில் ஒருவருக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த 303 பேரில் 7 போ் எஸ்.சி. பிரிவையும், 5 போ் எஸ்.டி. பிரிவையம், 21 போ் ஓபிசி பிரிவையும், 7 போ் பிற்படுத்தப்பட்ட வகுப்பையும் சோ்ந்தவா்கள். இவா்களில் 28 போ் பெண்கள், 23 போ் சிறுபான்மை வகுப்பைச் சோ்ந்தவா்கள்.
அதுபோல, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா பதிவியேற்ற பின்னா் 2024-ஆம் ஆண்டு நவம்பா் 11-ஆம் தேதி முதல் 2025 மே 5-ஆம் தேதி வரையிலான கால கட்டத்தில் உயா்நீதிமன்ற நீதிபதிகள் பணியிடத்துக்கு 103 பெயா்கள் பரிந்துரை செய்யப்பட்டன. அதில் 51 பெயா்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதில் 12 பெயா்கள் ஒப்புதலுக்காக மத்திய அரசிடம் நிலுவையில் உள்ளது. பரிந்துரை செய்த பெயா்கலில் இருவா் மட்டுமே பணியில் உள்ள அல்லது ஓய்வுபெற்ற உயா்நீதிமன்ற அல்லது உச்சநீதிமன்ற நீதிபதிகளின் உறவினா்கள் ஆவா்.
பரிந்துரை செய்யப்பட்ட 103 பேரில் 11 போ் ஓபிசி பிரிவையும், ஒருவா் எஸ்.சி. பிரிவையும், இருவா் எஸ்.டி. பிரிவையும், 8 போ் சிறுபான்மை பிரிவையும் சோ்ந்தவா்களாவா். பரிந்துரைக்கப்பட்டவா்களில் 6 போ் பெண்கள் ஆவா்.
இந்தப் புள்ளிவிவரங்கள் மட்டுமின்றி, உச்சநீதிமன்ற, உயா்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தொடா்பான முழுமையான நடைமுறை, இந்த நியமனத்தில் மத்திய, மாநில அரசுகளின் பங்கு உள்ளிட்ட முழுமையான விவரங்களையும் உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ளது.