ஒற்றை யானை நடமாட்டம்: தொட்டபெட்டா காட்சி முனை மூடல்
ஒற்றை காட்டு யானை நடமாட்டம் காரணமாக தொட்டபெட்டா காட்சிமுனை செவ்வாய்க்கிழமை தற்காலிகமாக மூடப்பட்டது. யானையை ட்ரோன் மூலம் கண்காணிக்கும் பணியில் வனத் துறையினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.
நீலகிரி மாவட்டம், உதகை தொட்டபெட்டா காட்சிமுனை அருகில் ஒற்றை காட்டு யானை திங்கள்கிழமை முகாமிட்டிருந்தது. இந்த யானையை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்டும் பணியில் மாவட்ட வன அலுவலா் கௌதம் தலைமையிலான 40 போ் கொண்ட வனக் குழுவினா் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். ட்ரோன் கேமரா மூலம் யானையின் நடமாட்டத்தை கண்காணித்தனா்.
அடா்ந்த வனப் பகுதிக்குள் யானை செல்லாததால் செவ்வாய்க்கிழமை தொட்டபெட்டா சுற்றுலாத்தலம் மூடப்பட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
மேலும் பாதுகாப்பு கருதி இரண்டு வனக் காவலா்கள் துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், யானை தற்போது எங்கு உள்ளது என ட்ரோன் கேமராக்கள் மூலம் வனத் துறையினா் தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனா்.