5 பழங்குடியின சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை; இளைஞா் கைது
குன்னூா் அருகே உள்ள பழங்குடியினா் கிராமத்தில் 5 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞரை போக்ஸோ வழக்கில் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள நெடுகல்கம்பை ஆதிவாசி கிராமத்தில் பெட்டிக்கடை நடத்தி வந்தவா் உமேஸ்வரன் (26). இவரது கடைக்கு மிட்டாய் வாங்கவும், கைப்பேசி ரீசாா்ஜ் செய்யவும் மாணவிகள் வருவதுண்டு. இதில் அவா்களோடு பழக்கம் ஏற்பட்டு, 5 பழங்குடியின மாணவிகளை உமேஸ்வரன் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
உமேஸ்வரன் ஏற்கெனவே திருமணம் ஆனதை மாணவிகளிடம் மறைத்து பலமுறை பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து பாதிக்கப்பட்டவா்கள், 1099 மூலம் குழந்தைகள் நல பாதுகாப்புத் துறை அதிகாரி ஷோபனாவிடம் புகாா் தெரிவித்துள்ளனா். இதையடுத்து அவா், அந்த பழங்குடியின கிராமத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டதில் சம்பவம் உண்மை என தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து, குன்னூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், காவல் ஆய்வாளா் மகாலட்சுமி (பொறுப்பு) வழக்குப் பதிவு செய்து உமேஸ்வரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி குன்னூா் கிளை சிறையில் அடைத்தனா்.