ஆபரேஷன் சிந்தூர்: தாக்குதல் நடத்தப்பட்ட இடங்கள் எவை?
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 இடங்கள் மீது இந்திய ராணுவம் நள்ளிரவில் தாக்குதல் நடத்தியது.
‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்குச் சொந்தமான 9 பயங்கரவாத மறைவிடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.
ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காமில் அப்பாவி சுற்றுலா மக்கள் மீது கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது.
அதன் தொடர்ச்சியாக ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) என்ற பெயரில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து, செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் இந்திய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். கடந்த 50 ஆண்டுகளில் முதல் முறையாக 150 கி.மீ. தொலைவில் உள்ள பஹவல்பூரில் இந்திய ராணுவத்தினர் பதிலடி தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இந்தப் பகுதியில் இருந்துதான் 2019 ஆம் ஆண்டில் புல்வாமா தாக்குதல் நடத்தி 40 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்கும் இங்கிருந்து திட்டம் தீட்டப்பட்டதாக முதல்கட்டத் தகவல்கள் வெளியாகின. இதனைக் கருத்தில் கொண்டே இந்தப் பகுதியில் இந்திய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியிருக்கும் 9 இடங்களும் இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளை நடத்துவதற்கு தீவிரமாக ஆதரித்து வந்த அமைப்புகள் இருந்ததாக உளவுத்துறை தகவல் அளித்தது. அதன் அடிப்படையிலேயே இந்த அதிரடித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது, மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் போன்ற இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாத அமைப்புகள், பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அதன் இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் நிறுவனத்திடமிருந்து ரகசிய உதவியைப் பெற்று வந்ததாகவும் தெரிவித்துள்ளனர். இந்த ஆதரவில் தேவையான நிதி, தளவாடங்கள், ராணுவ உதவி, போர்ப் பயிற்சி ஆகியவற்றைப் பெற்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எந்தெந்த இடங்கள், அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவரங்கள்!
மர்கஸ் அஹ்லே ஹதீஸ், பர்னாலா (லஷ்கர் இ தொய்பா)
மர்கஸ் அப்பாஸ், கோட்லி (ஜெய்ஸ் இ முகமது)
மஸ்கர் ரஹீல் ஷாஹித், கோட்லி (ஹிஸ்புல் முஜாஹிதீன்)
ஷவாய் நல்லா முகாம், முசாபராபாத் (லஷ்கர் இ தொய்பா)
சையத்னா பிலால் முகாம், முசாபராபாத் (ஜெய்ஸ் இ முகமது)
மர்கஸ் சுப்ஹான் அல்லா, பஹவல்பூர் (ஜெய்ஸ்-இ-முகமது)
மார்கஸ் தைபா, முரிட்கே (லஷ்கர்-இ-தொய்பா)
சர்ஜால், தெஹ்ரா கலான் (ஜெய்ஸ் இ முகமது)
மெஹ்மூனா ஜோயா, சியால்கோட் (ஹிஸ்புல் முஜாஹிதீன்)
இதையும் படிக்க: ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்!