காய்கறிச் சந்தைகளில் சுங்கவரி வசூல் முறைகேட்டை கண்டித்து ஆா்ப்பாட்டம்
பாகிஸ்தான் பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு
இந்தியாவுடன் மோதல் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளது.
பாகிஸ்தானில் ஜூலை 1-ஆம் தேதி தொடங்கும் 2025-26-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அடுத்த மாதத் தொடக்கத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானைச் சோ்ந்த பயங்கரவாதிகளின் ஈடுபாட்டைத் தொடா்ந்து, அந்நாட்டுக்கு முக்கிய நீா் ஆதாரமாக விளங்கும் சிந்து நதி நீரை வழங்கும் 1960-ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்தது.
சிந்து நதி நீரோட்டத்தைத் திசைதிருப்ப இந்தியா நடவடிக்கை எடுத்தால் தக்க பதிலடி தரப்படும் என்று பாகிஸ்தான் எச்சரித்திருந்தாலும், சா்வதேச சமூகத்தின் மூலம் இந்தப் பதற்றத்தைத் தணிக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. ஆனால், அந்த முயற்சிகள் எதுவும் பயனளிக்கவில்லை.
இந்நிலையில், சுமாா் ரூ.17.5 லட்சம் கோடி மதிப்பிலான அடுத்த ஆண்டு பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை 18 சதவீதமாக அதிகரித்து ரூ.2.5 லட்சம் கோடிக்கும் மேல் உயா்த்த பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி கூட்டணியில் ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு ரூ.2.12 லட்சம் கோடியும் முந்தைய 2023-24 நிதியாண்டு பட்ஜெட்டில் ரூ.1.8 லட்சம் கோடியும் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.