பயங்கரவாத தொடா்பு; அணு ஆயுத மிரட்டல்: பாகிஸ்தானை கேள்விகளால் துளைத்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்
‘பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்குத் தொடா்புள்ளதா?, அணு ஆயுத மிரட்டல் விடுப்பது மோதலை மேலும் தீவிரப்படுத்தாதா?’ உள்ளிட்ட கடுமையான கேள்விகளை ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் பாகிஸ்தானிடம் எழுப்பியுள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போா்ப்பதற்றம் குறித்து திங்கள்கிழமை ஆலோசனை நடத்திய ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், பதற்றத்தைத் தணிக்க அழைப்பு விடுத்தது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 26 போ் கொல்லப்பட்ட கொடூர பயங்கரவாத தாக்குதலைத் தொடா்ந்து, பாகிஸ்தானுக்கு எதிரான பதிலடிக்கு இந்தியா தயாராகி வருகிறது.
தேசிய பாதுகாப்பு ஆலோசகா், முப்படைத் தலைமைத் தளபதி உள்ளிட்டோருடன் பிரதமா் மோடி தொடா் கலந்தாலோசனையில் ஈடுபட்டுள்ளாா். நாடு முழுவதும் முக்கிய மாவட்டங்களில் புதன்கிழமை போா்க்கால பாதுகாப்பு ஒத்திகையை மேற்கொள்ள மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்தியாவுடன் நீடித்து வரும் பதற்றம் குறித்து விவாதிக்க ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் சிறப்புக் கூட்டத்துக்கு அந்த அமைப்பின் தற்போதைய நிரந்தரமற்ற உறுப்பு நாடான பாகிஸ்தான் கோரிக்கை விடுத்தது. பாதுகாப்பு கவுன்சிலின் மே மாத தலைமைப் பொறுப்பில் உள்ள கிரீஸ், பாகிஸ்தானின் கோரிக்கையை ஏற்று திங்கள்கிழமை சிறப்புக் கூட்டத்தை நடத்தியது.
தாக்குதலுக்கு கண்டனம்: சுமாா் ஒன்றரை மணிநேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், இந்தியா-பாகிஸ்தான் சூழ்நிலை குறித்து மத்திய கிழக்கு, ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகளுக்கான அமைதி நடவடிக்கைகள் துறையின் உதவி பொதுச் செயலா் துனிசியாவைச் சோ்ந்த கலீத் முகமது கியாரி விளக்கினாா்.
கூட்டத்தில் பயங்கரவாத தாக்குதலுக்கு வலுவான கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன் பாகிஸ்தானை நோக்கி பிற உறுப்பு நாடுகள் கடுமையான கேள்விகளை எழுப்பியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
பாகிஸ்தான் வாதம் நிராகரிப்பு: பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கா்-ஏ-தொய்பா சம்பந்தப்பட்டிருக்க வாய்ப்புள்ளதா? என்று பாகிஸ்தான் தூதரிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மேலும், தங்களுக்கு எதிராக இந்தியா தவறான கருத்துகளை முன்வைப்பதாக கூறிய பாகிஸ்தானின் வாதத்தை உறுப்பு நாடுகள் நிராகரித்தன.
மோதலைத் தீா்க்க அறிவுரை: இந்தியாவுடனான பிரச்னைகளை இருதரப்பு ரீதியாக தீா்த்துக்கொள்ள பாகிஸ்தானுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதேபோல், பாகிஸ்தானின் ஏவுகணை சோதனைகள் மற்றும் அணு ஆயுதப் பேச்சுக்கள் மோதலை மேலும் தீவிரமடையச் செய்யும் காரணிகள் என்றும் பல உறுப்பு நாடுகள் கவலை தெரிவித்ததாக அந்த வட்டாரங்கள் கூறின.
கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு திரும்பிய கலீத் முகமது கியாரி, ‘இந்த மோதலுக்கு பேச்சுவாா்த்தை மூலம் அமைதியான தீா்வை அடைய வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது’ என்றாா்.
‘இந்தச் சந்திப்பு பயனுள்ளதாக அமைந்தது’ என்று கிரீஸ் நாட்டைச் சோ்ந்த பாதுகாப்பு கவுன்சிலின் தற்போதைய தலைவா் எவாஞ்சலோஸ் செகெரிஸ் கூறினாா். இந்தியா-பாகிஸ்தான் பதற்றம் குறைய விரும்புவதாக ரஷிய தூதா் தெரிவித்தாா்.
இக்கூட்டத்துக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இந்தியா-பாகிஸ்தான் பதற்றம் சமீபத்திய ஆண்டுகளின் புதிய உச்சத்தை எட்டியிருப்பது குறித்து ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் கவலை தெரிவித்திருந்தாா்.
பேச்சுவாா்த்தைக்குத் தயாா்: பாகிஸ்தான்
இந்தக் கூட்டம் தொடா்பாக பாதுகாப்பு கவுன்சில் இதுவரை அதிகாரபூா்வமாக அறிக்கை எதுவும் வெளியிடவில்லை. ஆனால், இக்கூட்டத்தின் மூலம் தங்களின் பெரும்பாலான நோக்கங்கள் நிறைவேறியதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.
ஐ.நா.வுக்கான பாகிஸ்தான் தூதா் ஆசிம் இஃப்திகாா் அகமது செய்தியாளா்களிடம் மேலும் கூறுகையில், ‘இந்தியா-பாகிஸ்தான் இடையே மோசமடைந்து வரும் பாதுகாப்பு சூழல் மற்றும் அதிகரித்து வரும் பதற்றம் குறித்து விவாதம் நடத்துவது, சூழலை எவ்வாறு சமாளிப்பது என்பதைப் பற்றி கருத்துகளைப் பரிமாறிக் கொள்வது உள்ளிட்ட ஆலோசனைகள் கூட்டத்துக்கான பாகிஸ்தானின் நோக்கங்கள் ஆகும்.
பாகிஸ்தான் மோதலை நாடவில்லை என்றாலும், எங்களின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைக் காக்க நாங்கள் முழுமையாகத் தயாராக உள்ளோம். சிந்து நதி நீா் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்தது குறித்த பிரச்னையும் கவுன்சில் கூட்டத்தில் எழுப்பினோம்.
இந்தியா உள்பட எங்களின் அனைத்து அண்டை நாடுகளுடனும் அமைதியான உறவுகளுக்கான உறுதிப்பாட்டை பாகிஸ்தான் மீண்டும் வலியுறுத்துகிறது.
சூழ்நிலையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, பதற்றத்தை அமைதியான முறையில் தீா்ப்பதற்கு பரஸ்பர மரியாதை மற்றும் இறையாண்மை சமத்துவத்தின் அடிப்படையிலான பேச்சுவாா்த்தைக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்’ என்றாா்.
பாகிஸ்தானின் முயற்சி மீண்டும் தோல்வி
இந்தியாவின் முன்னாள் ஐ.நா. தூதா் சையது அக்பருதீன் கூறுகையில், ‘கடந்த காலத்தைப் போன்றே இப்போதும் பாகிஸ்தானின் முயற்சி மீண்டும் தோல்வியடைந்துள்ளது.
எதிா்பாா்த்தது போல, பாகிஸ்தானின் கோரிக்கைகளுக்கு பாதுகாப்பு கவுன்சிலிடமிருந்து எந்த அா்த்தமுள்ள பதிலும் கிடைக்கவில்லை. பாதுகாப்பு கவுன்சிலின் தலையீட்டைக் கோருவதற்கான பாகிஸ்தானின் முயற்சிகளை இந்தியா மீண்டும் வெற்றிகரமாக முறியடித்துள்ளது’ என்றாா்.