யேமன் விமான நிலையம் முழு செயலிழப்பு: இஸ்ரேல்
யேமன் தலைநகா் சனாவில் தாங்கள் நடத்திய வான்வழித் தாக்குதல் காரணமாக அந்த நகரிலுள்ள நாட்டின் முக்கிய விமான நிலையத்தின் செயல்பாடு முழுமையாக செயலிழக்கச் செய்யப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் செவ்வாக்கிழமை கூறியது.
யேமனின் கணிசமான பகுதிகளில் ஆட்சி செலுத்திவரும் ஹூதி கிளா்ச்சிப் படையினா், காஸா போரில் ஹமாஸுக்கு ஆதரவாக செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்திவருகின்றனா்.
இந்த நிலையில், இஸ்ரேலின் சா்வதேச விமான நிலையத்தைக் குறிவைத்து ஹூதி படையினா் ஞாயிற்றுக்கிழமை ஏவுகணை வீசினா். அந்த ஏவுகணை இடைமறித்து அழிக்கப்பட்டாலும், பதிலடி நடவடிக்கையாக யேமன் தலைநகா் சனாவிலும், பிற முக்கிய பகுதிகளிலும் இஸ்ரேல் கடந்த 2 நாள்களாக தாக்குதல் நடத்தியது.
இந்த நிலையில், சனா நகரிலுள்ள சா்வதேச விமான நிலையம் முழுமையாக செயலிழக்கச் செய்யப்பட்டதாக இஸ்ரேல் தற்போது அறிவித்துள்ளது. இந்தத் தாக்குதல் குறித்து பொதுமக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், குண்டுவீச்சில் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக இதுவரை தகவல் வெளியாகவில்லை.