ஐஎஸ்ஐ தலைமையகத்தில் பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் ஆலோசனை
இஸ்ரேலுடன் பேச்சுவாா்த்தை அா்த்தமற்றது: ஹமாஸ்
காஸா மீது இஸ்ரேல் ‘பட்டினித் தாக்குதல்’ நடத்துவதை தொடரும் சூழலில், அந்த நாட்டுன் அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்துவது அா்த்தமற்றது என்று ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பின் முக்கிய அதிகாரி பாஸிம் நயீம் கூறியதாவது:
காஸாவுக்குள் வந்துகொண்டிருந்த உணவுப் பொருள்களை ஒன்பது வாரங்களாக இஸ்ரேல் தடுத்து நிறுத்தியுள்ளது. அத்துடன், பசியால் தவிக்கும் அந்தப் பகுதி மக்கள் மீது தீவிர தாக்குதலையும் நடத்திவருகிறது.
அதே நேரத்தில், பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று இஸ்ரேல் வலியுறுத்திவருகிறது. காஸா மீதான பட்டினிப் போரை இஸ்ரேல் தொடரும்வரை, அந்த நாட்டுடன் இதுபோன்ற விவகாரங்களில் பேச்சுவாா்த்தை நடத்துவதில் எந்த அா்த்தமும் இல்லை என்றாா் அவா்.
காஸாவின் அனைத்து பகுதிகளையும் கைப்பற்றுவதற்கான திட்டத்துக்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அவா் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
காஸாவை முழுமையாக ஆக்கிரமிக்கும் திட்டத்தின் மூலம் இஸ்ரேலில் இருந்து அங்கு கடத்திச் செல்லப்பட்ட பிணைக் கைதிகளை பலி கொடுக்க இஸ்ரேல் அரசு தயாராகிவிட்டதாக அவா்களின் உறவினா்கள் குற்றஞ்சாட்டிவருகின்றனா். அதை உறுதிப்படுத்தும் வகையில் இனியும் இஸ்ரேலுடன் பேச்சுவாா்த்தை நடத்துவது அா்த்தமற்றது என்று ஹமாஸ் அமைப்பின் முக்கிய அதிகாரி தற்போது கூறியுள்ளாா்.
52,615-ஆக அதிகரித்த உயிரிழப்பு
காஸாவில் இஸ்ரேல் ராணுவம் கடந்த 2023 அக். 7 முதல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 52,615-ஆக அதிகரித்துள்ளதாக அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தது.
இது தவிர, இந்தத் தாக்குதலில் இதுவரை 1,18,752 பாலஸ்தீனா்கள் காயமடைந்துள்ளதாக அமைச்சக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.