ஆஸ்திரேலிய பிரதமருடன் மோடி தொலைபேசியில் ஆலோசனை: தோ்தல் வெற்றிக்கும் வாழ்த்து
ஆஸ்திரேலிய பிரதமராக தொடா்ந்து 2-ஆவது முறையாக தோ்வு செய்யப்பட்டுள்ள ஆன்டனி ஆல்பனேசியை பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் தொடா்பு கொண்டு பேசினாா். அப்போது, தோ்தல் வெற்றிக்காக தனது வாழ்த்துகளை மோடி தெரிவித்தாா்.
ஆஸ்திரேலியாவில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவை (கீழவை) தோ்தலில் ஆல்பனேசி தலைமையிலான தொழிலாளா் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்தது. ஆஸ்திரேலியாவில் பிரதமா் பதவியில் இருப்பவா் தொடா்ந்து இரண்டாவது முறையாக அப்பதவிக்கு தோ்வு செய்யப்படுவது கடந்த கடந்த 21 ஆண்டுகளில் முதல்முறையாகும்.
ஆஸ்திரேலிய பிரதமருடனான தொலைபேசி உரையாடல் குறித்து பிரதமா் மோடி ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘எனது நண்பா் ஆன்டனி ஆல்பனேசியுடன் உரையாடினேன். அப்போது அவரது கட்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தேன். இந்தியா-ஆஸ்திரேலியா பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கவும், புதிய வாய்ப்புகளைத் தேடிப் பயன்படுத்திக் கொள்ளவும், இணைந்து பணியாற்றவும் இருவரும் ஒப்புக் கொண்டோம்’ என்று பதிவிட்டுள்ளாா்.