புதிய போப் தேர்தல்: வாடிகனில் தொலைத்தொடர்பு சேவை துண்டிப்பு!
புதிய போப்பை தேர்ந்தெடுப்பதற்கான கார்டினல்கள் மாநாடு நடைபெறும் பகுதியில் தொலைத்தொடர்பு சேவைகளுக்கான சிக்னல் துண்டிக்கப்படவுள்ளது.
நுரையீரல் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்த வாடிகன் நகரத்தின் தலைவரும் கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுருவுமான போப் பிரான்சிஸ் கடந்த ஏப்.21 ஆம் தேதி காலமானார்.
இந்த நிலையில், வாடிகன் நகரில் அமைந்துள்ள 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாரம்பரியமிக்க சிஸ்டைன் சேப்பல் தேவாலயத்தில் புதிய போப்பைத் தேர்ந்தெடுப்பதற்கான ரகசிய ஆலோசனைக் கூட்டமும் வாக்கெடுப்பும் நாளை நடைபெறவுள்ளது.
உலகெங்கிலுமிருந்து கத்தோலிக்க திருச்சபையில் போப்பை தேர்ந்தெடுப்பதற்கான பிரதிநிதித்துவம் பெற்ற 133 காா்டினல்கள் ஏற்கெனவே வாடிகன் நகரை வந்தடைந்துள்ளனர்.
புதிய போப்பைத் தேர்ந்தெடுக்க தகுதிப் பெற்ற 133 கார்டினல்களில் கோவாவைச் சேர்ந்த பேராயர் ஃபிளிப்பே நெரி ஃபெர்ராரோ (வயது 72), ஹைதரபாத்தைச் சேர்ந்த கார்டினல் அந்தோனி பூலா (63), கேரளத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காடு (51) மற்றும் பசேலியோஸ் கிளேமிஸ் (65) ஆகிய 4 இந்திய கார்டினல்களும் இடம்பெற்றுள்ளனர்.
வாடிகன் நேரப்படி, இன்று மாலை 4.30 மணியளவில் காா்டினல்கள் மாநாடு தொடங்கவுள்ளது. மாநாடு நடைபெறும் சிஸ்டைன் சேப்பல் தேவாலயத்தை சுற்றியும் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சரியாக பிற்பகல் 3 மணியளவில் சிஸ்டைன் சேப்பல் சுற்றுப்பகுதி முழுவதும் தொலைத்தொடர்புக்கான சிக்னல்கள் துண்டிக்கப்படும்.
மாநாட்டில் கலந்துகொள்ளும் கார்டினல்கள், வாடிகன் ஊழியர்கள் அனைவரும் தங்களின் செல்போன் மற்றும் மின்னணு சாதனங்களை ஒப்படைக்க வேண்டும். புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டு மாநாடு நிறைவடைந்த பிறகுதான் செல்போன்கள் ஒப்படைக்கப்படும்.
மேலும், வெளியுலகத்திலிருந்து சிஸ்டைன் சேப்பல் முழுவதுமாக துண்டிக்கப்பட்டு சீல் வைக்கப்படும். மாநாடுக்கு அனுமதிக்கப்பட்டவர்களைத் தவிர யாருக்கும் அனுமதி வழங்கப்படாது.
புதிய போப்பைத் தேர்வு செய்ய மூன்றில் இரண்டு பங்கு கார்டினல்களின் வாக்குகள் தேவை. நாளைய தினமே புதிய போப் தேர்வு செய்யப்பட்டால், தேவாலயத்தில் இணைக்கப்பட்டுள்ள புகைக்கூண்டில் வெள்ளை புகையை வெளியேற்றி பாரம்பரிய முறைப்படி அறிவிப்பார்கள். கரும்புகை வெளியானால், புதிய போப் இன்னும் தோ்வாகவில்லை என்று பொருள்.