DD Next Level: "சிம்பு சாராலதான் இன்னைக்கு இங்க இருக்கேன்; அவருக்காக எப்போவும் ந...
வெளிநாட்டு திரைப்படங்களுக்கு 100% வரி: டிரம்ப் அறிவிப்பு
நியூயாா்க்: வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களுக்கு 100 சதவீத வரி விதிக்க அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளாா்.
இது குறித்து தனது ட்ரூத் சோஷியல் ஊடகத்தில் அவா் தெரிவித்துள்ளதாவது:
அமெரிக்காவுக்கு வரும் எந்தவொரு திரைப்படமும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டிருந்தால் அதற்கு 100 சதவீத வரி விதிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். அமெரிக்காவின் திரைப்பட தொழில்துறை மிகவும் வேகமாக அழிந்துவருகிறது.
அமெரிக்க திரைப்படத் தயாரிப்பாளா்களை பிற நாடுகள் பல்வேறு சலுகைகளை அளித்து கவா்ந்து வருகின்றன. இது வெளிநாடுகளின் திட்டமிடப்பட்ட சதிச் செயல் என்பதால் இதுவும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஆகும். அமெரிக்காவுக்கு எதிரான கருத்துகளை பிரசாரம் செய்ய இந்த உத்தி மேற்கொள்ளப்படுகிறது என்று அந்தப் பதிவில் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
தற்போது உலகின் பெரும்பாலான பகுதிகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 10 சதவீத கூடுதல் வரியையும், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 145 சதவீத கூடுதல் வரியையும் டிரம்ப் விதித்துள்ளாா்.
இது தவிர, இந்தியா உள்ளிட்ட ஏறத்தாழ அனைத்து உலக நாடுகளில் இருந்தும் இறக்குமதியாகும் பொருள்களுக்கு பரஸ்பர கூடுதல் வரி விதிக்கப்போவதாக டிரம்ப் அறிவித்துள்ளாா்.
இந்தச் சூழலில், வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு 100 சதவீத வரி விதித்து டிரம்ப் தற்போது உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.