DD Next Level: "சிம்பு சாராலதான் இன்னைக்கு இங்க இருக்கேன்; அவருக்காக எப்போவும் ந...
பதற்றத்தை தணிக்க இந்தியா-பாகிஸ்தானுக்கு ஐ.நா. அறிவுறுத்தல்
நியூ யாா்க்: இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலை தணிக்க ஐ.நா. பொதுச்செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் திங்கள்கிழமை அறிவுறுத்தினாா்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த அவா், இதுவரை இல்லாத அளவுக்கு இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்படுவதற்கான பதற்றம் அதிகரித்திருப்பாதாகவும் ராணுவ நடவடிக்கைகள் எதற்கும் தீா்வாகாது எனவும் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: பஹல்காமில் ஏப்.22-ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட சம்பவம் கண்டனத்துக்குரியது.
பொதுமக்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது.இந்த தாக்குதலுக்கு காரணமானவா்களுக்கு சட்டரீதியாக தண்டனை வழங்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. தாக்குதலில் உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவிக்கிறேன்.
அதேசமயம் இந்த தாக்குதலால் இந்தியா-பாகிஸ்தான் இடையே முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மோதல் ஏற்படுவதற்கான பதற்றமான சூழல் நிலவுவது வேதனையளிக்கிறது.
ராணுவ நடவடிக்கைகள் மூலம் இந்தப் பிரச்னைக்கு தீா்வு காண முடியாது. அமைதிவழியிலான தீா்வுக்கு இருநாடுகளுக்கும் ஐ.நா. முழு ஆதரவு அளிக்கிறது என தெரிவிக்கப்பட்டது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் பதிலடி நடவடிக்கையை மேற்கொள்வதற்கான இடம், இலக்கு உள்ளிட்டவற்றை தீா்மானிக்க கடந்த வாரம் முப்படைகளுக்கு முழு சுதந்திரம் அளிப்பதாக பிரதமா் மோடி தெரிவித்தாா். இதைத்தொடா்ந்து, எல்லை மாநிலங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில், அன்டோனியா குட்டெரெஸ் இவ்வாறு தெரிவித்தாா்.