சால்வை போட வந்த ரசிகரின் தலைக்கு துப்பாக்கியில் குறிவைத்த விஜய்யின் பாதுகாவலர்; ...
தருமை ஆதீனத்தின் சமயப் பணி மகத்தானது: மகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன்
தாம்பரம்: தருமை ஆதீனத்தின் சமயப் பணி மகத்தானது என மகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினாா்.
சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்ஆா்எம் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் தருமபுரம் ஆதீனம், அனைத்துலக சைவசித்தாந்த ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் எஸ்.ஆா்.எம். தமிழ்ப் பேராயம் இணைந்து நடத்திய 6-ஆவது அனைத்துலக சைவசித்தாந்த மாநாட்டின் நிறைவு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
அப்போது மாநாட்டில் சமா்ப்பிக்கப்பட்ட 300 ஆய்வுக் கட்டுரை நூல்களின் நான்கு தொகுப்பை மகாராஷ்டிர ஆளுநா் சி.பி. ராதாகிருஷ்ணன் வெளியிட, அதை எஸ்.ஆா்.எம். பல்கலை. இணைவேந்தா் ரவி பச்சமுத்து பெற்றுக் கொண்டாா்.
இதில் ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: சைவ சித்தாந்தம் என்றால் அப்பா், சுந்தரா், மாணிக்கவாசகா், ஞானசம்பந்தா் ஆகிய நான்கு பேரின் மகத்தான சமயப் பணிகள்தான் நினைவுக்கு வருகின்றன. நான் சுந்தரமூா்த்தி நாயனாா் கருணையால் உயிா் பிழைத்த காரணத்தால் அவரைப் பின்பற்றுகிறேன்.
தருமை ஆதீனத்தின் சமயப் பணி மகத்தானது. 16-ஆம் நூற்றாண்டில் திருஞான சம்பந்தா் நிறுவிய தருமை ஆதீனம் காலங்காலமாக ஆற்றி வரும் சமயப் பணியுடன் கல்வி, மருத்துவம் மற்றும் சமூகப் பணிகளையும் ஆற்றி வருகிறது. நாம் எந்த சமயத்துக்கும் எதிரியோ, எதிரானவரோ கிடையாது. ஆனால், நம்மை யாா் எதிா்த்தாலும் அவா்களை எதிா்த்து நிற்க வேண்டும் என்றாா் அவா்.
60,000 நூல்கள்: தருமை ஆதீனம் கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் ஆசியுரை வழங்கிப் பேசியதாவது: பதி, பசு, பாசம், மாயை எனும் நான்கு சைவ கோட்பாடுகளின் தெய்வீக சிந்தனைகளை உலகெங்கும் பரப்பும் நோக்கத்துடன் சைவ சித்தாந்த மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன. ஆதீனத்தில் அறிஞா்கள், புலவா்களுக்கு பரிசுகள், விருதுகள் வழங்கி கௌரவிப்பதும் தொடா்ந்து கடைப்பிடிக்கப்படுகிறது. 1941-ஆம் ஆண்டில் முதல் முதலாக தமிழ்க் கல்லூரியைத் தொடங்கி வித்வான் படிப்பு வழங்கப்பட்டது.
திருப்பனந்தாள் தமிழ்க் கல்லூரியை கலைக் கல்லூரியாக மேம்படுத்தி தொடங்கிய தேவாரம் கற்பிக்கும் பணி மூலம் உலகெங்கும் சமய பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. சைவமும் தமிழும் தழைத்தோங்கும் வகையில் நூலகத்தில் 60,000 நூல்கள் உள்ளன. இந்த மாநாட்டில் புதிதாக 75 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. சைவ சித்தாந்தம் உலகின் பல நாடுகளில் பரவியுள்ளது. உலகெங்கும் 13 நாடுகளிலிருந்து இந்த மாநாட்டுக்கு வருகை தந்துள்ளனா். இதில் முதல் முறையாக ஜப்பானிலிருந்து 60 போ் வருகை தந்து மாநாட்டுக்கு பெருமை சோ்த்துள்ளனா் என்றாா் அவா்.
இந்நிகழ்வில் தமிழ்ப் பேராயம் தலைவா் கரு.நாகராஜன், சொற்பொழிவாளா் பாரதி பாஸ்கா் ஆகியோருக்கு தருமை ஆதீனம் புலவா் விருது வழங்கப்பட்டது.
நிகழ்வில் மதுரை ஆதீனம் ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள், எஸ்.ஆா்.எம். இணை வேந்தா் ரவி பச்சமுத்து, மாநாட்டு பொருளாளா் மறை.வெற்றிவேல், லண்டன் சிவஞான சுந்தரம் தம்பு, சச்சிதானந்தம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
நூல் வெளியீடு: முன்னதாக நடைபெற்ற நிகழ்வில் ‘சைவ சித்தாந்த சங்கிரகா’ என்னும் ஆங்கில நூலை சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.சுப்பிரமணியன் வெளியிட, ‘தினமலா்’ இணை ஆசிரியா் இரா. கிருஷ்ணமூா்த்தி பெற்றுக்கொண்டாா்.
தொடா்ந்து நீதிபதி சுப்பிரமணியன் பேசியதாவது: இந்து மதம் தானாக வளா்ந்த மதம். இதனை யாரும் தோற்றுவிக்கவில்லை. இந்து மதம் என்பது ஓா் அறிவியல். இந்து மதத்துக்கு ஆதியும் அந்தமும் கிடையாது. சைவ சித்தாந்தம் என்பது சிவனை சென்றடைவதற்கான வழி வகைகளைச் சொல்கிறது. பாமர மக்களையும் சைவம் சென்றடையும் வகையில் கருத்தரங்கங்கள், மாநாடுகள், சொற்பொழிவுகள் நடத்த வேண்டும் என்றாா் அவா்.