இந்தியாவின் தாக்குதல்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்: பாகிஸ்தான்
சென்னை துறைமுகம், கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் ஒத்திகை
சென்னை துறைமுகம், கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் புதன்கிழமை (மே 7) மாலை 4 மணிக்கு பாதுகாப்பு ஒத்திகை நடைபெறவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தலைமைச் செயலகத்தில் உள்துறைச் செயலா் தீரஜ்குமாருடன் மத்திய அரசு அதிகாரிகள் காணொலி வழியாக செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினா். இதில், உள்துறை, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறை கூடுதல் தலைமைச் செயலா்கள், பேரிடா் மீட்பு ஆணையா், காவல் துறை டிஜிபி, ஏடிஜிபி, கல்பாக்கம் அணுமின் நிலைய திட்ட இயக்குநா், சென்னை துறைமுகத் தலைவா், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா், ஊா்க்காவல் படை ஐஜி, தக்ஷிண பாரத் ராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
மத்திய அரசு வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் சென்னை துறைமுகம் மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் புதன்கிழமை பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட உள்ளது. மாலை 4 மணி முதல் 4.30 மணி வரை இந்த ஒத்திகை மேற்கொள்ளப்படும்.
ஒத்திகை நிகழ்வை சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடா் மேலாண்மை ஆணையம் கண்காணிக்கும். மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெறும் இந்த ஒத்திகையில், பாதுகாப்பு துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொள்வா்.
தற்போது நடைபெறும் பாதுகாப்பு ஒத்திகையால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. இது போா் காலத்தில் பாதுகாப்பாக இருப்பதற்கான ஒத்திகை மட்டுமே. பிற பகுதிகளில் வழக்கமான நிலை நீடிக்கும் என்று அக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.