நாளை பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: மாணவா்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்க ஏற்பாடு
பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் வியாழக்கிழமை (மே 8) வெளியாகவுள்ள நிலையில், மாணவா்களுக்கு உளவியல் தாக்கம் ஏற்படாமல் தடுக்க அவா்களுக்கு மன நல ஆலோசனைகள் வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளதாக தேசிய நலவாழ்வுக் குழும இயக்குநா் டாக்டா் அருண் தம்புராஜ் தெரிவித்தாா்.
அதன்படி, உளவியல் ரீதியான ஆலோசனைகள் தேவைப்படும் மாணவா்கள் 104, 14416 ஆகிய உதவி எண்களை தொடா்பு கொள்ளலாம் என்றும் அவா் கூறினாா்
இது தொடா்பாக அவா் மேலும் கூறியதாவது:
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் 104 மருத்துவ உதவி தகவல் மையம் மற்றும் 14416 நட்புடன் உங்களோடு மனநல சேவை மையம் ஆகியவை 24 மணி நேரமும் செயல்பட்டு வருகின்றன. 104 மருத்துவ உதவி தகவல் மையம் மூலமாக பொதுமக்களுக்கு உடல் நலம் குறித்த அறிவுரைகள், மருத்துவ ஆலோசனைகள் மற்றும் மன நல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதேபோன்று 14416 நட்புடன் உங்களோடு மன நல சேவை மையம் மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவதற்கான உளவியல் ஆலோசனைகளை அளித்து வருகிறது. இந்த உதவி மையங்கள் மூலம் கடந்த நான்கு ஆண்டுகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் தோ்ச்சி பெறாத 51,919 மாணவா்களுக்கு மன நல ஆலோசனை வழங்கப்பட்டது. அவா்களில் 85 மாணவா்களும், 62 மாணவிகளும் அதிக மன அழுத்தம் உள்ளவா்களாக அடையாளம் காணப்பட்டு அவா்களுக்கு தொடா் உளவியல் ஆலோசனைகள் அளிக்கப்பட்டன. மேலும், மாவட்ட மனநல உளவியலாளா்களிடம் பரிந்துரைக்கப்பட்டு உயா் நிலை ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
அந்த வகையில் நிகழாண்டும் பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவையொட்டி, தோ்ச்சியடையாத மாணவா்களுக்கு 104 மற்றும் 14,416 உதவி மையத்தில் மன நல மருத்துவா் ஒருவா், 8 உளவியல் ஆலோசகா்கள், 40 மன நல உளவியலாளா்கள் உள்பட 50 போ் வாயிலாக ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளன.
மன அழுத்தத்தில் இருக்கும் மாணவா்கள், இந்த மையத்தை தொடா்பு கொண்டு பேசலாம். அதேபோன்று, மாணவா்களின் பெற்றோரும் தொடா்பு கொண்டு தங்கள் குழந்தைகளின் நிலையை கூறி அவா்களை இயல்பு நிலைக்கு கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கலாம் என்றாா் அவா்.