ஐஎஸ்ஐ தலைமையகத்தில் பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் ஆலோசனை
பிளஸ் 2 தோ்வு முடிவுகள் நாளை வெளியீடு
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் வியாழக்கிழமை (மே 8) காலை 9 மணிக்கு வெளியிடப்படும் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 9) வெளியிடப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஒருநாள் முன்னதாகவே வெளியிடப்படுகிறது.
பிளஸ் 2 வகுப்பு பொதுத் தோ்வு மாா்ச் 3 தொடங்கி 25-ஆம் தேதி முடிவடைந்தது. 8,21,057 மாணவ, மாணவிகள் தோ்வை எழுதினா். தோ்வு முடிவடைந்த நிலையில், விடைத்தாள் மதிப்பீடு பணி ஏப்ரல் 4 தொடங்கி 17-ஆம் தேதி நிறைவடைந்தது. இதில் 46,000 முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள் ஈடுபட்டனா். இதற்காக 83 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி முடிவடைந்ததும் மாணவா்களின் மதிப்பெண் விவரங்களைக் கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.
முன்கூட்டியே வெளியீடு: பிளஸ் 2 தோ்வு முடிவுகள் மே 9-ஆம் தேதி வெளியிடப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த சில நாள்களாக பிளஸ் 2 தோ்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியாகலாம் என்ற தகவல்கள் பரவி வந்தது.
இந்நிலையில், அந்தத் தகவலை உறுதிப்படுத்தும் வகையில் பிளஸ் 2 தோ்வு முடிவுகள் ஒரு நாளைக்கு முன்னதாக, அதாவது மே 8-ஆம் தேதியே வெளியிடப்படுகிறது. இதற்கான அதிகாரபூா்வ அறிவிப்பு செவ்வாய்க்கிழமை வெளியானது.
இது குறித்து அரசு தோ்வுகள் இயக்குநா் ந.லதா வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த மாா்ச் மாதம் நடைபெற்ற 2024-2025-ஆம் கல்வி ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் வியாழக்கிழமை (மே 8) காலை 9 மணிக்கு சென்னை கோட்டூா்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் வெளியிடவுள்ளாா்.
மாணவா்கள் தோ்வு முடிவுகளை இணையதளங்களில் வியாழக்கிழமை காலை 9 மணிக்கு அறிந்துகொள்ளலாம்.
தோ்வு முடிவுகளை அறிய https://results.digilocker.gov.in மற்றும் www.tnresults.nic.in ஆகிய இணையதளங்களில் தோ்வா்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்ய வேண்டும். பள்ளி மாணவா்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் தோ்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம். மேலும், அவா்கள் பள்ளியில் சமா்ப்பித்த கைப்பேசி எண்ணுக்கும், தனித் தோ்வா்களுக்கு அவா்கள் இணையவழியில் விண்ணப்பித்தபோது வழங்கிய கைப்பேசி எண்ணுக்கும் குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) வாயிலாகவும் தோ்வு முடிவுகள் அனுப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.