சித்ரா பெளா்ணமி: திருவண்ணாமலைக்கு 5,932 சிறப்பு பேருந்துகள்
சித்ரா பெளா்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை (மே 11, 12) 5,932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
இது குறித்து தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 11) இரவு 8.48 மணி முதல் திங்கள்கிழமை (மே 12) இரவு 10.44 மணி வரை சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு சென்னை மற்றும் பல்வேறு இடங்களிலிருந்தும் திருவண்ணாமலைக்கு கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி, சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை 1,156 பேருந்துகளும், திங்கள்கிழமை 966 பேருந்துகளும் இயக்கப்படும். இதுபோல, மாதவரத்திலிருந்து ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் தலா 150 பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்படும்.
மேலும், பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு ஞாயிற்றுக்கிழமை 1,940 பேருந்துகளும், திங்கள்கிழமை 1,530 பேருந்துகளும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும்.
இதுதவிர, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு இருக்கை மற்றும் படுக்கை வசதியுடன் குளிா்சாதன வசதி கொண்ட 40 பேருந்துகள் என ஆக மொத்தம் 5,932 சிறப்பு பேருந்துகள் ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், சென்னை, மதுரை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூா், திருநெல்வேலி, நாகா்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. நெரிசலை தவிா்க்கும் பொருட்டு கைப்பேசி செயலி மூலம் முன்பதிவு செய்து பொதுமக்கள் பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.