செய்திகள் :

MI vs GT : சஸ்பென்ஸ் கொடுத்த மழை; ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்; - மும்பையை எப்படி வீழ்த்தியது குஜராத்?

post image

'மும்பை தோல்வி!'

மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி வான்கடேவில் நடந்து முடிந்திருக்கிறது. இரண்டு அணிகளுமே மிகச்சிறப்பாக ஆடி வரும் என்பதால் இந்தப் போட்டி மீது பெருத்த எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கேற்ற வகையில் இடையில் மழையெல்லாம் புகுந்து ஆட பயங்கர சுவாரஸ்யமாகவே இந்தப் போட்டி நடந்து முடிந்திருக்கிறது.

MI vs GT
MI vs GT

ட்விஸ்ட் மேல் ட்விஸ்டாக அரங்கேறிய இந்தப் போட்டியில் மும்பை இந்தப் போட்டியில் எங்கேதான் சறுக்கியது? பரபரப்பாக சென்ற சேஸிங்கை குஜராத் எப்படி திட்டமிட்டு வெற்றிகரமாக மாற்றியது?

Gujarat Titans
Gujarat Titans

'மும்பையின் சொதப்பல் பேட்டிங்!'

குஜராத் அணியின் கேப்டன் கில்தான் டாஸை வென்றிருந்தார். சேஸிங்கைத் தேர்வு செய்தார். மும்பை அணி பேட்டிங்கைத் தொடங்கியது. ரோஹித், ரிக்கல்டன், சூர்யகுமார் யாதவ் ஆகியோரெல்லாம் நல்ல பார்முக்கு வந்துவிட்டதால் கடந்த சில போட்டிகளை மும்பையின் டாப் ஆர்டர் பேட்டர்களே முடித்துக் கொடுத்தனர். ஆனால், இன்றைக்கு அப்படி அமையவில்லை.

மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 155 ரன்களை மட்டுமே எடுத்தது. குஜராத் அணியின் பௌலர்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் சறுக்கினர். ஆனால், மிடில் ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி போட்டியை இழுத்து பிடித்துவிட்டனர். முதல் 6 ஓவர்கள் பவர்ப்ளே முடிவில் மும்பை அணி 56 ரன்களை எடுத்து 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

Will Jacks & Suryakumar
Will Jacks & Suryakumar

ரிக்கல்டனை சிராஜூம் ரோஹித்தை அர்ஷத்தும் வீழ்த்தியிருந்தனர். குஜராத்துக்கு மேற்கொண்டு விக்கெட்டுகளை எடுக்கும் வாய்ப்புகளும் இருந்தது. ஆனால், வில் ஜாக்ஸூக்கு மட்டுமே 2 கேட்ச்களையும் சூர்யாவுக்கு 1 கேட்ச்சையும் ட்ராப் செய்தனர். இதைப் பயன்படுத்தில் வில் ஜாக்ஸூம் சூர்யாவும் 71 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப்பை அமைத்துவிட்டனர்.

Rashid Khan
Rashid Khan

'அசத்திய குஜராத் ஸ்பின்னர்கள்!'

மும்பை 200 ரன்களை நோக்கி செல்வதைப் போல இருந்தது. இந்த சமயத்தில்தான் குஜராத்தின் ஸ்பின்னர்கள் ஆட்டத்தை மாற்றினர். பவர்ப்ளே முடிந்தவுடன் ரஷீத் கானும் சாய் கிஷோரும் இணைந்து ஒரு நீண்ட ஸ்பெல்லை வீசினர். இவர்களின் பந்துவீச்சில் 11, 12, 13 என இந்த 3 ஓவர்களிலும் தலா ஒரு விக்கெட் விழுந்தது. மூன்றுமே பெரிய விக்கெட்டுகள். முதலில் சூர்யாவை சாய் கிஷோர் வீழ்த்தினார்.

சூர்யா பவர்ப்ளேக்குப் பிறகு 2 பவுண்டரிக்களை மட்டுமே அடித்திருந்தார். மேலும் வில் ஜாக்ஸ் - சூர்யா பார்ட்னர்ஷிப் நின்று செட்டும் ஆகிவிட்டனர். இதனால் கியரை மாற்ற சூர்யா முயன்றார். சாய் கிஷோருக்கு எதிராக ஒரு இன்சைட் அவுட் ஷாட்டை அடிக்க முயன்றார். நன்றாகத்தான் ஆடினார். ஆனாலும் பவுண்டரியை க்ளியர் செய்ய முடியவில்லை. ஷாருக்கானிடம் கேட்ச் ஆனார்.

Sai Kishore
Sai Kishore

35 ரன்களில் அவுட். ரஷீத் கானின் அடுத்த ஓவரில் அரைசதத்தை கடந்திருந்த வில் ஜாக்ஸ் மடக்கி அடிக்க முயன்று ஸ்கொயரில் சாய் சுதர்சனிடம் கேட்ச் ஆனார். சாய் கிஷோர் ஸ்லிப் வைத்து டைட்டாக வீசிய அடுத்த ஓவரில் ஸ்லாக் ஸ்வீப் ஆட முயன்று ஹர்திக் 1 ரன்னில் அவுட். இந்த மூன்று விக்கெட்டுகளும்தான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. ரஷீத் கானும் சாய் கிஷோரும் ஆட்டத்தையே மாற்றி விட்டனர்.

இருவரும் இணைந்து 8 ஓவர்களில் 55 ரன்களை மட்டுமே கொடுத்து 3 பெரிய விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஜெரால்டு கோட்ஸி வீசிய 14 வது ஓவரில் திலக் வர்மாவும் அவுட் ஆகினார். மும்பை அணியின் பேட்டர்களிடம் அத்தனை அவசரம் ஏன் தென்பட்டது என்பதை புரிந்துகொள்ளவே முடியவில்லை. 4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து மும்பை அணி தடுமாறியது. கடைசியில் ஹெல்மட்டில் அடியெல்லாம் கார்பின் போஸ்ச் கொஞ்சம் அதிரடியாக ஆடியதால் மும்பை அணி 150 ரன்களை கடந்தது.

'சேஸிங்கில் மழை கொடுத்த சஸ்பென்ஸ்!'

குஜராத்துக்கு டார்கெட் 156. குஜராத்துக்கும் மும்பை அணி அதிக சவால் கொடுக்கும் என எதிர்பார்க்க, அவர்களை விட இடையிடையே குறுக்கிட்ட மழை பெரும் சவாலை கொடுத்தது. போல்ட் வீசிய இரண்டாவது ஓவரிலேயே சாய் சுதர்சன் அவுட் ஆகிவிட்டார். நம்பர் 3 இல் பட்லர் வந்தார். அப்போதிருந்தே மழை தூரத் தொடங்கிவிட்டது. ஆனாலும் போட்டியை நிறுத்தும் வகையில் மழை இல்லை என்பதால் நடுவர் தொடர்ந்து போட்டியை நடத்திச் சென்றார்.

மழைத் தூரல்களோடு பலத்த காற்றும் அடிக்க ரிஸ்க் எடுக்காமல் நின்றே ஆடியது கில் - பட்லர் கூட்டணி. 5 ஓவர்களை கடந்தவுடன் குஜராத் மீது அழுத்தம் ஏறத் தொடங்கியது. ஏனெனில், 5 ஓவருக்குப் பிறகு மழை பெய்து மீண்டும் ஆட்டத்தைத் தொடர முடியாமல் போனால் DLS முறை கொண்டு வரப்படும். அதன்படி எந்த அணி முன்னிலையில் இருக்கிறதோ அவர்களே வென்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள்.

Buttler
Buttler

'DLS சுவாரஸ்யம்!'

6 ஓவர்கள் முடிந்திருந்த தருவாயில் DLS முறைப்படி குஜராத் 40 ரன்களை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் 29 ரன்களை மட்டுமே எடுத்திருந்தனர். அந்த நேரத்தில் மழையால் போட்டி தடைபட்டு மீண்டும் தொடர முடியாமல் போயிருந்தால் மும்பை 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கும். இந்த சமயத்தில் மழை வலுப்பெற்று போட்டி அப்படியே நிறுத்தப்பட்டால் நல்லது என நினைத்த மும்பை அணி, பௌலிங்கைத் தாமதப்படுத்தும் வேலைகளில் இறங்கியது.

Mumbai Indians
Mumbai Indians

பவர்ப்ளே முடிந்தவுடனேயே அந்த இரண்டரை நிமிட டைம் அவுட்டையும் எடுத்துப் பார்த்தனர். ஆனாலும் போட்டியை நிறுத்தும் அளவுக்கு மழை அதிகமாகவில்லை.

எட்டாவது ஓவரை ஹர்திக் வீசினார். இந்த ஓவரில்தான் குஜராத் அணி அந்த DLS ஸ்கோருக்கு சமமாக வந்தது. அதற்கு ஹர்திக்குக்குதான் நன்றி சொல்ல வேண்டும். ஏனெனில், அந்த ஓவரில் 3 ஒயிடுகள் 2 நோ-பால்கள் என எக்ஸ்ட்ராக்களாக வீசி 11 பந்துகளை மொத்தமாக வீசினார்.

Mumbai Indians
Mumbai Indians

8 ஓவர்களின் முடிவில் DLS படி குஜராத் 53 ரன்களை எடுத்திருக்க வேண்டும். குஜராத் 58 ரன்களை எடுத்திருந்தது. பட்லர்தான் கொஞ்சம் ரிஸ்க் எடுத்து ஆடினார். கில் விக்கெட்டை தற்காத்து 100 க்கும் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில்தான் ஆடினார். கடைசி வரை நின்று போட்டியை முடிக்க வேண்டும் என்பதுதான் அவரின் திட்டமாக இருந்தது.

10 ஓவர்கள் முடிகையில் DLS படி குஜராத்து 68 ரன்கள் தேவை. ஆனால், அவர்கள் 69 ரன்களை எடுத்திருந்தனர். இதன்பிறகு ஒரு ட்விஸ்ட் நடந்தது. கார்பின் போர்ஸ்ச் ஹெல்மட்டி அடி வாங்கியிருந்தார் அல்லவா? அவருக்கு பதிலாக அஸ்வனி குமாரை மும்பை அணி Concussion Sub ஆக அழைத்து வந்தது. அவர் வந்து பட்லரின் விக்கெட்டை எடுத்து கொடுக்க குஜராத் மீது மீண்டும் அழுத்தம் ஏறியது.

12 ஓவர்களின் முடிவில் DLS படி 84 ரன்கள் தேவை. ஆனால், குஜராத் 79 ரன்களை மட்டுமே எடுத்தது. குஜராத் சார்பில் இம்பாக்ட் ப்ளேயராக ரூதர்போர்டு வந்து அடுத்த 2 ஓவர்களில் போட்டியை மாற்றினார். வில் ஜாக்ஸ் வீசிய 13 வது ஓவரில் 15 ரன்களையும், அஸ்வனி குமார் வீசிய 14 வது 13 ரன்களையும் பவுண்டரி சிக்சர்கள் மூலம் எடுக்க காரணமாக அமைந்தார். இதன்மூலம் 14 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி DLS ஸ்கோரை விட 8 ரன்கள் அதிகமாக எடுத்திருந்தது.

Rutherford & Gill
Rutherford & Gill

இந்த சமயத்தில் மழை பிடித்தது. வீரர்கள் வெளியேற்றப்பட்டு பிட்ச் கவர்ஸால் மூடப்பட்டது. அப்படியே போட்டி தடைபட்டிருந்தால் குஜராத் தான் வெற்றி. ஆனால், ட்விஸ்ட் நடந்தது. சில நிமிடங்களிலேயே போட்டி மீண்டும் தொடங்கியது. குஜராத்துக்கு 6 ஓவர்களில் 49 ரன்கள் தேவைப்பட்டது.

மழை இடைவேளைக்குப் பிறகு ஹர்திக் பும்ராவோடு தொடங்கினார். மும்பை எதிர்பார்த்த ட்விஸ்ட் நடந்தது. நீண்ட நேரமாக நின்று ஆடிக்கொண்டிருந்த கில் 43 ரன்களில் பும்ரா பந்தில் போல்ட் ஆனார். போல்ட் வீசிய 16 வது ஓவரில் அதிரடியாக ஆடி வந்த ரூதர்போர்டு lbw ஆகினார். போட்டி சமநிலைக்கு வந்தது. பரபரப்பான கட்டத்தை எட்டியது. ஷாருக்கானும் ராகுல் திவேதியாவும் க்ரீஸில் இருந்தனர்.

Bumrah
Bumrah

பும்ரா மீண்டும் சர்ப்ரைஸ் கொடுத்தார். 17 வது ஓவரில் ஒரு ஆங்கிள் இன் டெலிவரியில் ஷாரூக்கானை போல்ட் ஆக்கினார். அஸ்வனி குமார் அடுத்த ஓவரில் ரஷீத் கானை lbw ஆக்கினார். 18 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 132 ரன்களை எடுத்து 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அந்த சமயத்தில் மழை மீண்டும் பிடிக்க போட்டி மீண்டும் நிறுத்தப்பட்டது. 18 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 136 ரன்களை எடுத்திருக்க வேண்டும். ஆனால், குஜராத் 4 ரன்களை குறைவாக எடுத்திருந்தது.

Rain
Rain

மீண்டும் மழை ஓய்ந்த பிறகு போட்டி தொடங்கியது. ஆனால், 1 ஓவர் குறைக்கப்பட்டிருந்தது. அதாவது, குஜராத் அணி 1 ஓவரில் 15 ரன்களை எடுக்க வேண்டும். அவர்களுக்கான டார்கெட் 147 என மாற்றியமைக்கப்பட்டது. ஜெரால்டு கோட்ஸியும் ராகுல் திவேதியாவும் க்ரீஸில் இருந்தனர். அந்த கடைசி ஓவரை மும்பை சார்பில் தீபக் சஹார் வீசினார். இதிலும் ஒரு ட்விஸ்ட் இருந்தது. மும்பை மெதுவாக பந்து வீசியதால் வட்டத்துக்கு வெளியே 4 பீல்டர்கள் மட்டுமே வைக்க முடியும் எனும் நிலை. ராகுல் திவேதியா முதல் பந்தையே பவுண்டரி ஆக்கினார். அடுத்த பந்தில் சிங்கிள். மூன்றாவது பந்தில் கோட்ஸியா சிக்சர் அடித்தார். அடுத்த பந்து சிங்கிள். ஆனால், நோ - பால் ஆக மாறியது. ப்ரீ ஹிட் கிடைத்தது. அந்த பந்தில் சிங்கிள் கிடைக்க, கடைசிக்கு முந்தைய பந்தில் ஷார்ட் பிட்ச் டெலிவரியில் கோட்ஸியா கேட்ச் ஆகி அவுட் ஆனார். கடைசி பந்தில் குஜராத்தின் வெற்றிக்கு 1 ரன் தேவை. பௌலர் அர்ஷத் ஸ்ட்ரைக்கில் இருந்தார். நேராக மிட் ஆப் கையில் அடித்துவிட்டு 1 ரன்னை ஓடிவிட்டார். குஜராத் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

தீபக் சஹார்
தீபக் சஹார்

கடைசி ஓவரை ஹர்திக் கூட வீசியிருக்க முடியும். ஆனால், ஹர்திக் தீபக் சஹாரின் கையில் பந்தை கொடுத்தார். தீபக் சஹார் ஒரு பவர்ப்ளே பௌலர். அவருக்கு டெத் ஓவரை கொடுத்ததுதான் இங்கே பிரச்னை. மும்பை கடுமையாகப் போராடியும் தோல்வியைத் தழுவியது.

மும்பையின் தோல்விக்குக் காரணமென நீங்கள் நினைப்பதைக் கமென்ட்டில் தெரிவியுங்கள்!

Gill : 'டெஸ்ட் மேட்ச் ஆடுற மாதிரி இருந்துச்சு; ஆனால்...' - திரில் வெற்றி குறித்து கில்

"குஜராத் வெற்றி!'மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி வான்கடேவில் நடந்து முடிந்திருக்கிறது. மழைக்கு நடுவே பல ட்விஸ்ட்களோடு நடந்து முடிந்த இந்தப் போட்டியை குஜராத் அணி DL... மேலும் பார்க்க

Hardik Pandya : 'நாங்கள் செய்திருப்பது ஒரு க்ரைம்!' - தோல்வி பற்றி ஹர்திக் பாண்ட்யா

'மும்பை தோல்வி!'மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி வான்கடேவில் நடந்து முடிந்திருக்கிறது. மழைக்கு நடுவே பல ட்விஸ்ட்களோடு நடந்து முடிந்த இந்தப் போட்டியை குஜராத் அணி DLS... மேலும் பார்க்க

Virat Kohli: "நான் தனிமையாக உணருவதில்லை; காரணம்..." - பர்சனல் பகிர்ந்த விராட் கோலி

தொகுப்பாளர் மாயந்தி லாங்கர் உடன் RCB அணியின் பாட்காஸ்டில் கலந்துகொண்ட விராட் கோலி, தனது தனிப்பட்ட நேரம் மற்றும் குடும்ப வாழ்க்கை பற்றிப் பல விஷயங்களைப் பகிர்ந்துள்ளார்.வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும்... மேலும் பார்க்க

Kohli: "4 வருசத்துல நீ சர்வதேச போட்டியில விளையாடணும்; இல்லனா.." - கோலியை உருவாக்கிய அந்த வீரர் யார்?

RCB அணியின் பாட்காஸ்டில் கலந்துகொண்டு பேசிய விராட் கோலி தனது கிரிக்கெட் கெரியரின் பல அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். முதல் முறையாக ஆர்சிபி அணிக்காக விளையாடும்போதும் அணில் கும்ப்ளே, டிராவிட் போன்ற போன்... மேலும் பார்க்க

Virat Kohli: `என் மகனை உருவாக்கியது அவர் தான்’ - யஷ் தயாளின் தந்தை நெகிழ்ச்சி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் த்ரில்லான வெற்றியைப் பெற்றதன் மூலம் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை எட்டியது. அந்த போட்டியில் கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவை... மேலும் பார்க்க

Kohli: 'அடுத்த சச்சின் நான்தான்னு விராட் சொல்லிட்டே இருப்பாரு...' - கோலி குறித்து பள்ளி ஆசிரியர்

இந்திய கிரிக்கெட்டின் முடி சூடா மன்னராக திகழும் விராட் கோலி டி20, ஓடிஐ, டெஸ்ட் என மூன்று பார்மட் கிரிக்கெட் தொடரிலும் பல்வேறு சாதனைகளைப் படைத்திருக்கிறார். ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக விளையாடி வருகிறார்... மேலும் பார்க்க