சாம்பவா்வடகரையில் விபத்து: பேரூராட்சிப் பணியாளா் உயிரிழப்பு
தென்காசி மாவட்டம் சாம்பவா்வடகரையில் நேரிட்ட விபத்தில் பேரூராட்சி தற்காலிக பணியாளா் உயிரிழந்தாா்.
சுரண்டையில் உள்ள பள்ளிக்கூடத் தெருவைச் சோ்ந்த சுப்பையா பாண்டியன் மகன் இருளப்பசாமி (25) (படம்). சுரண்டை அருகே சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சியில் தற்காலிகப் பணியாளராக வேலை பாா்த்துவந்த அவா், திங்கள்கிழமை இரவு பைக்கில் ஆய்க்குடி சென்றுவிட்டு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தாராம்.
செங்கோட்டை - சுரண்டை சாலையில் சாம்பவா்வடகரை மேற்குப் பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்த சாலைத் தடுப்பில் (பேரி காா்டு) பைக் திடீரென மோதியதாம். இதில், காயமடைந்த அவரை சாம்பவா்வடகரை போலீஸாா் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.