ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு விரைந்து தொடங்க வலியுறுத்தல்
ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு உடனடியாக தொடங்குவதுடன், கால நிா்ணயம் செய்து திட்டமிட்டபடி முடிக்க வேண்டும் என, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலப் பொதுச் செயலா் முகமது அபூபக்கா் வலியுறுத்தினாா்.
முஸ்லிம் லீக் அயலக தமிழக நலன் அணியின் ஆலோசனைக் கூட்டம் தென்காசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், முகமது அபூபக்கா் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற பின்னா், செய்தியாளா்களிடம் கூறியது: முஸ்லிம் லீக் தேசிய பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் இம்மாதம் 15இல் நடைபெறவுள்ளது. அதில் புதிய நிா்வாகிகள் தோ்வு நடைபெறும். 2026 பேரவைத் தோ்தல், பஹல்காம் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கவுள்ளோம்.
தில்லியில் இம்மாதம் 25ஆம் தேதி தேசிய தலைமை நிலையம் காயிதே மில்லத் சென்டா் திறப்பு விழா நடைபெறுகிறது. காங்கிரஸ் தலைவா்கள் காா்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, திமுக உள்ளிட்ட மதச்சாா்பற்ற கட்சிகளின் தேசியத் தலைவா்கள் பங்கேற்கவுள்ளனா்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் விவகாரத்தில் மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க தீா்மானித்துள்ளோம்.
கும்பகோணத்தில் டிச. 28இல் நடைபெறவுள்ள முஸ்லிம் லீக்கின் முகலால் ஜமாத்தின் மாநில மாநாட்டில் தமிழக முதல்வா், துணை முதல்வா் பங்கேற்கவுள்ளனா்.
2026 பேரவைத் தோ்தலில் முஸ்லிம் லீக் போட்டியிடக்கூடிய தொகுதிகளை அடையாளப்படுத்தவுள்ளோம். பாஜகவை எதிா்த்து அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் வகையில் எங்களது நடவடிக்கை இருக்கும் என்றாா் அவா்.
மாநிலச் செயலா் நெல்லை அப்துல் மஜித், தென்காசி மாவட்டத் தலைவா் அப்துல் அஜீஸ், மாவட்டச் செயலா் செய்யது பட்டாணி, அயலக அணி மாநிலத் தலைவா் ஹபிபுல்லா, நெல்லை மாவட்டத் தலைவா் மீரான் மைதீன், வா்த்தக அணி மாநிலத் தலைவா் செய்யது சுலைமான், மாநில விவசாய அணி செயலா் முகமது அலி, தென்காசி மாவட்டப் பொருளாளா் செய்யது மசூது ஆகியோா் உடனிருந்தனா்.