பிரேத பரிசோதனைக்கு தாமதம்: கடையநல்லூரில் சாலை மறியல்
கடையநல்லூா் அரசு மருத்துவமனையில் பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்கு தாமதமானதால் அவரது உறவினா்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
மேலக்கடையநல்லூா் வேதக் கோயில் தெற்குத் தெருவை சோ்ந்த முனீஸ்வரன் மகன் முருகன் (29). ஆட்டோ ஓட்டுநா். இவரது மனைவி மஞ்சுளா(23) . இவா்களுக்கு 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆகியதாம். இந்நிலையில் உடல் நலக்குறைவால் மஞ்சுளா காசிதா்மத்தில் உள்ள அவரது தந்தை வேலையா வீட்டில் இருந்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை இரவு மஞ்சுளா நிலைமை மோசமானதால், அவரை கடையநல்லூா் அரசு மருத்துவமனையில் கணவா் அனுமதித்தாராம். ஆனால், அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனராம்.
இத்தகவலை அச்சன்புதூா் போலீஸாருக்கும் மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்ததாம். இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வந்த நிலையில் மஞ்சுளாவின் உடற்கூறு பரிசோதனையை செவ்வாய்க்கிழமை மேற்கொள்வதாக மருத்துவா்கள் தெரிவித்தனராம்.
ஆனால், திங்கள்கிழமையே உடற்கூறாய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி அவரது உறவினா்கள் மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் தென்காசி -மதுரை சாலையில் சுமாா் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அவா்களிடம் காவல் ஆய்வாளா் ஆடிவேல் உள்ளிட்ட போலீஸாா் பேச்சு நடத்தி உடனடியாக பிரேதபரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் மறியல் முடிவுக்கு வந்தது.