இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித், கோலி இடம்பெறுவார்களா? கௌதம் கம்பீர் பதில்!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரும் இந்திய அணியில் இடம்பெறுவார்களா என்பது குறித்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பேசியுள்ளார்.
இந்திய அணி வீரர்கள் பலரும் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார்கள். ஐபிஎல் தொடர் நிறைவடைந்த பிறகு, இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற ஜூன் 20 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
இதையும் படிக்க: மகிழ்ச்சியாக இருக்க விரும்பியதால் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினேன்: விராட் கோலி
அணியில் ரோஹித், கோலி இடம்பெறுவார்களா?
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த டெஸ்ட் தொடரில் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரும் அணியில் இடம்பெறுவார்களா என்பது குறித்து தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: அணியின் தலைமைப் பயிற்சியாளரின் வேலை அணியில் யார் இடம்பெற வேண்டும் என்பதை தேர்வு செய்வது கிடையாது. அது அணித்தேர்வுக் குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் வேலை. பிளேயிங் லெவனில் யார் இடம்பெற வேண்டும் என்பதை மட்டுமே பயிற்சியாளர் முடிவு செய்ய முடியும். எனக்கு முன்பு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர்களாக செயல்பட்டவர்கள் யாரும் அணித் தேர்வுக்குழுவில் இல்லை. நானும் அணித் தேர்வுக்குழு உறுப்பினர் கிடையாது.

ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் நன்றாக விளையாடும் வரை தொடர்ந்து அணியில் இருப்பார்கள். வீரர் ஒருவர் தனது கிரிக்கெட் பயணத்தை எப்போது தொடங்க வேண்டும், எப்போது முடிக்க வேண்டும் என்பது சம்பந்தப்பட்ட தனிநபரின் முடிவே. எந்த ஒரு பயிற்சியாளரும், தேர்வுக்குழு உறுப்பினரும், பிசிசிஐயும் வீரர் ஒருவர் எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பதை கூற முடியாது. வீரர் ஒருவர் நன்றாக விளையாடினால், 40 அல்ல 45 வயது வரை கூட விளையாடலாம். யார் தடுக்கப் போகிறார்கள்?
இதையும் படிக்க: அதிரடியாக விளையாடுவதை ஆதரிப்பதாக நான் ஒருபோதும் கூறவில்லை: டேனியல் வெட்டோரி
ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் 2027 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணியில் இடம்பெறுவது அவர்கள் விளையாடும் விதத்தை பொருத்தே முடிவு செய்யப்படும். அவர்களது சிறப்பான செயல்பாடுகளே 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அவர்கள் இடம்பெறுவார்களா என்பதை உறுதி செய்யும். அவர்கள் இருவரது செயல்பாடுகள் குறித்து நான் என்ன சொல்வது? அவர்கள் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடிய விதத்தை இந்த உலகம் பார்த்தது என்றார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் மோசமாக விளையாடி, ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளானது குறிப்பிடத்தக்கது.