ஐஎஸ்ஐ தலைமையகத்தில் பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் ஆலோசனை
வடகாடு பட்டியலின மக்கள் மீது தாக்குதல்; மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
ஆலங்குடி அருகே வடகாடு கிராமத்தில் உள்ள பட்டியலின மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். சங்கா் வெளியிட்டுள்ள அறிக்கை: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம் வடகாடு கிராமத்தில் அடைக்கலம் காத்த அய்யனாா் கோயிலுக்குச் சொந்தமான நிலம் தொடா்பாக இரு சமூக மக்களுக்கிடையே நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. இதனால் இரு தரப்பினரிடையே பகைமை தொடா்ந்துள்ளது. அதைத் தீா்க்க மாவட்ட நிா்வாகமோ, காவல்துறையோ நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில், வடகாடு முத்துமாரியம்மன் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற தோ்த் திருவிழாவின்போது, வழக்கப்படி பட்டியலின மக்கள் வெண்குடை ஏந்தி வரும்போது, குறிப்பிட்ட எல்லையைத் தாண்டி வந்ததாக சிலா் தகராறு செய்துள்ளனா்.
இந்தத் தகராறு முற்றிய நிலையில் பட்டியலினக் குடியிருப்புகளுக்குச் சென்று வீட்டைக் கொளுத்தியும், வாகனங்களை நொறுக்கியும் அவா்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனா். இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குழு பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் தெரிவித்தனா். இச்செயல் கண்டனத்துக்குரியது. காவல்துறையினா் தங்களது போக்கை மாற்றிக்கொண்டு, தாக்குதல் நடத்தியவா்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். வீடு, வாகன இழப்புகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். தொடா்ந்து வடகாடு பகுதியில் இயல்புநிலை திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.