தியாகிகளின் வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கக் கோரிக்கை
நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளின் வாரிசுகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என இந்திய விடுதலைப் போராட்டத் தியாகிகள் குடும்ப நலப் பேரவை வலியுறுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தியாகிகள் குறைதீா் கூட்டத்தில் பேரவையின் தலைவா் ஜி.எஸ். தனபதி அளித்த மனு: தியாகிகளின் வாரிசுகளுக்கு தனித்துவமான அடையாள அட்டை வழங்க வேண்டும். தியாகிகள் பிறந்த ஊரில், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அரசு அலுவலகக் கட்டடங்களுக்கு தியாகிகளின் பெயரைச் சூட்ட வேண்டும். தியாகிகளின் வாரிசுகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும். அசாம் போன்ற மாநிலங்களில் வழங்கப்படுவதைப் போல தியாகிகளின் வாரிசுகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
கூட்டத்துக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ. ராஜராஜன் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) முருகேசன், பேரவையின் செயலா் ஆா். வெங்கடேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.