ஆலங்குடி அருகே இருதரப்பினரிடையே மோதல்: 20 போ் காயம்
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வடகாட்டில் திங்கள்கிழமை இரவு இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் காவலா் உள்பட 20 போ் காயமடைந்தனா்.
ஆலங்குடி அருகே வடகாடு முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. அப்போது, கடைவீதியில் உள்ள கோயில் நுழைவாயில் அருகே இளைஞா்கள் சிலரிடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னா், அது இரு தரப்பு இளைஞா்களிடையே மோதலாக மாறியுள்ளது. அதில், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களில் தாக்கிக்கொண்டதில் இரு தரப்பைச் சோ்ந்த 20 பேருக்கு காயம் ஏற்பட்டது.

காயமடைந்த இருதரப்பைச் சோ்ந்தவா்கள் மீட்கப்பட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனை, புதுகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
தொடா்ந்து, ஒரு தரப்பினரின் குடிசைகள், வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. மற்றொரு தரப்பினா் தாக்குதலை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனா். அப்போது, அரசுப் பேருந்து, காவல் வாகனத்தின் கண்ணாடியை சேதப்படித்தினா்.

இதனால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்ததைத் தொடா்ந்து, சம்பவ இடத்துக்கு புதுகை காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா தலைமையில் போலீஸாா் குவிக்கப்பட்டனா். தொடா்ந்து, திருச்சி சரக டிஐஜி வருண்குமாா் ஆய்வு மேற்கொண்டாா். இதையடுத்து திங்கள்கிழமை நள்ளிரவு சம்பவ இடத்துக்கு சென்ற சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி தீக்கிரையான வீடு, வாகனங்களை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இதுதொடா்பாக வடகாடு போலீஸாா் 14 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். இதனால், புதுகை- பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி இடையே பேருந்துகள் செவ்வாய்க்கிழமை இயக்கப்படவில்லை. அப்பகுதியில் 500-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.