மற்றவர்களின் கதை என்னை திருப்திப்படுத்தவில்லை: சூரி
நடிகர் சூரி விடுதலை, கருடன், கொட்டுக்காளி படங்களைத் தொடர்ந்து விலங்கு இணையத் தொடர் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் மாமன் எனும் படத்தில் சூரி நாயகனாக நடித்துள்ளார்.
லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவான இந்தப் படத்துக்கு பிரபல இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்துக்கு நடிகர் சூரியே கதை எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உறவுகளின் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்க நடிகை ஸ்வாசிகா சூரியின் தங்கையாக நடிக்கிறார்.
இப்படம் வருகிற மே 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் சூரி கூறியதாவது:
கருடன், விடுதலை, கொட்டுக்காளி படங்கள் எல்லாம் ஒவ்வொன்றும் வேறு மாதிரியானவை. இறுக்கமான படங்களாக இருந்ததால் ஜாலியான குடும்பப் படம் ஒன்றில் நடிக்க விரும்பினேன்.
பலரும் கதைக் கூறினார்கள், ஆனால் எதுவும் எனக்கு பிடித்தமாதிரி அமையவில்லை.
இந்த இயக்குநரை எனக்கு பல ஆண்டுகளுக்கு முன்பாகவே தெரியும். இயக்குநர் பாண்டியராஜ் படங்களில் இருந்தே இவருடன் நல்ல பழக்கம். நாங்கள் அடிக்கடி செல்போனில் பேசுவோம்.
இவர் ஒரு கிராமத்து கதையைக் கூறினார். அது எனக்கு போதுமானதாக இல்லை. நான் ஒரு கதையைக் கூறினேன். அது அவருக்கும் பிடித்தது. அதனால்தான் இந்தப் படத்தை செய்தோம் என்றார்.