செய்திகள் :

உ.பி., கிராமத்தின் 78 வருடத் தவிப்பு; சோலார் விளக்கின் ஒளியில் கனவை நனவாக்கிய 10ம் வகுப்பு மாணவன்!

post image

மதத்தின் பெயரில், சாதியின் பெயரால், மொழியின் பெயரால், பாலினத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்தி, சக மனிதனுக்கெதிராக இன்னொரு சக மனிதனை முன்னிறுத்தித் துண்டாடப்பட்டிருக்கும் சமூகத்தை, வேற்றுமை களைந்த அறிவார்ந்த சமூகமாக, அனைத்து தரப்பினரையும் சமமாக மதிக்கும் சமூகமாக மாற்றும் ஒரே ஆயுதம் கல்வி மட்டுமே.

கல்வியின்பால் ஒருவர் அடையும் உச்சம் என்பது எந்தவொரு பொருளாதார உச்சத்தாலும் சமன் செய்ய முடியாதது.

அதனால்தான், பொருளாதாரத்தை அளவுகோலாக வைக்காமல், சமூகம் மற்றும் கல்வி ரீதியாகப் பின்தங்கியவர்கள் என்ற அளவுகோலை வைத்து இட ஒதுக்கீடு உருவாக்கப்பட்டது.

ஆனால், அதில் இப்போது பொருளாதாரம் என்ற அளவுகோலையும் கொண்டுவந்துவிட்டார்கள்.

கல்வி
கல்வி

அடுத்ததாக, பள்ளிக் கல்வி தேர்வு முறைகளில் பல மாற்றங்களைக் கொண்டுவந்து, குழந்தைப் பருவத்திலேயே இவர்களுக்குப் படிப்பு வராது என்று ஃபில்டர் செய்யும் வேலைகளும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

இத்தகைய மாற்றங்கள் எதுவும் அறியாத ஒரு குக்கிராமத்தின் நூற்றாண்டுக் கனவை 10-ம் வகுப்பு மாணவன் இன்று நிறைவேற்றியிருக்கிறார்.

குக்கிராமத்தின் 78 வருடத் தவிப்பு!

உத்தரப்பிரதேச மாநிலம் பராபங்கி மாவட்டத்தில் நிஜாம்பூர் என்ற குக்கிராமம் இருக்கிறது. அங்கு வசிப்பவர்களின் மொத்த எண்ணிக்கையே சுமார் 300தான். அவர்கள் பெரும்பாலும் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள்.

இந்தியா சுதந்திரமடைந்து 78 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், இந்தக் கிராமத்தில் 78 ஆண்டுகளாக ஒருவர் கூட 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை.

இந்த நிலையில், அக்கிராமத்தைச் சேர்ந்த ராம்கேவல் என்ற 15-வயது சிறுவன் 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று, தனது கிராமத்தின் நூற்றாண்டுக் கனவை நனவாக்கியிருக்கிறார்.

ராம்கேவல்
ராம்கேவல்

சோலார் விளக்கின் ஒளியில் படிப்பு!

இவரின் தந்தை ஜெகதீஷ் ஒரு தினசரி கூலித் தொழிலாளர். தாய் புஷ்பா, கிராம தொடக்கப்பள்ளியில் சமையலராகப் வேலை செய்துவருகிறார். புஷ்பா 5-ம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கிறார்.

இந்தத் தம்பதிக்கு நான்கு பிள்ளைகள். அவர்களில் மூத்தவர் ராம்கேவல். குடும்பச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, திருமண ஊர்வலங்களில் விளக்குகளை எடுத்துச் செல்வது போன்ற வேலைகளைச் செய்துகொண்டே, தனது கிராமத்துக்கு அருகிலுள்ள அகமதுபூரில் அரசு இடைநிலைக் கல்லூரியில் படித்து வந்தார்.

தினமும் வேலை செய்து ரூ. 200 முதல் ரூ. 300 வரை சம்பாதித்து வீட்டுக்குக் கொண்டுவருவார். இரவு எவ்வளவு தாமாக வீட்டுக்கு வந்தாலும், சோலார் விளக்கின் ஒளியில் படிப்பார்.

நான்தான் படிக்கவில்லை என் மகனாவது...

தனது மகன் தேர்ச்சி பெற்றது குறித்து பேசிய தாய் புஷ்பா, "எனது மகனைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன்" என்றும், தந்தை ஜெகதீஷ், "என்னால்தான் படிக்க முடியவில்லை. ஆனால், என் மகனைப் படிக்க ஊக்குவித்தேன். வேலைக்குச் சென்று வந்த பிறகு, எப்போதும் வீட்டில் படிப்பார்" என்றும் பெருமையுடன் கூறினர்.

ராம்கேவல்
ராம்கேவல்

மாணவன் ராம்கேவல், "நான் ஒருபோதும் தேர்ச்சி பெற மாட்டேன் என்று, எனது கிராமவாசிகளே சிலர் கேலி செய்தார்கள். ஆனால், அவர்களின் கூற்றைப் பொய்யாக்குவேன் என்று நான் உறுதியாக நம்பினேன்" என்று கூறியவர், பொறியாளர் ஆவதே தனது கனவு என்று கூறியிருக்கிறார்.

நிஜாம்பூர் கிராமத்துக்கே முன்மாதிரி மாணவனாகச் சாதனை படைத்திருக்கும் ராம்கேவலை அங்கீகரிக்கும் வகையில் மாவட்ட மாஜிஸ்திரேட், ஞாயிற்றுக்கிழமை ராம்கேவலையும், அவரின் பெற்றோரையும் நேரில் அழைத்துக் கௌரவித்தார். அதோடு, ராம்கேவலின் மேற்படிப்புக்கு முழு உதவியையும் செய்வதாக அவர் உறுதியளித்தார்.

ராம்கேவலின் இந்த சாதனைக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

மகாராஷ்டிரா: மும்மொழிக் கொள்கையின் கீழ் 1 முதல் 5-வது வகுப்பு வரை இந்தி கட்டாயம்!

மத்திய அரசு புதிய கல்வித்திட்டத்தின் கீழ் மும்மொழிக் கொள்கையை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு தமிழகம் உட்பட சில மாநிலங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மகாராஷ்டிரா அரசு மத்திய அரசின் மும்மொழி... மேலும் பார்க்க