முன்கூட்டியே தொடங்கும் தென்மேற்குப் பருவமழை!
தென்மேற்குப் பருவமழை இந்தாண்டு முன்கூட்டியே தொடங்கவிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கத்திரி வெய்யில் ஞாயிற்றுக்கிழமை (மே 4) தொடங்கியது. வரும் 28-ஆம் தேதி வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், கத்திரி வெயில் காலம் தொடங்கும் முன்பே பரவலாக வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது.
ஆனால், கத்திரி வெய்யில் தொடங்கிய முதல் நாள் மாலையே சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.
இந்த நிலையில், தென்மேற்குப் பருவமழையானது வருகின்ற மே 13 ஆம் தேதியே தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வழக்கமாக மே இறுதி வாரத்தில் அந்தமான் பகுதியில் தென்மேற்குப் பருவமழை தொடங்கும் நிலையில், இந்தாண்டு இரண்டு வாரங்கள் முன்னதாகவே தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் நிலவுகிறது.
இதனால் அக்னி வெய்யிலின் தாக்கம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.