இஸ்ரேல் விமான நிலையம் அருகே ஏவுகணைத் தாக்குதல்! அபுதாபி திரும்பிய இந்திய விமானம்...
பிரப்சிம்ரன் சிங் அரைசதம் விளாசல்; லக்னௌவுக்கு 237 ரன்கள் இலக்கு!
லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 236 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் ஹிமாசலில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, பஞ்சாப் கிங்ஸ் முதலில் விளையாடியது.
இதையும் படிக்க: அதிக முறை 500+ ரன்கள்... டேவிட் வார்னரின் சாதனையை முறியடித்த விராட் கோலி!
பிரப்சிம்ரன் அரைசதம் விளாசல்
முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 236 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான பிரியன்ஷ் ஆர்யா ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன் பின், பிரப்சிம்ரன் மற்றும் ஜோஷ் இங்லிஷ் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தது. இருப்பினும், ஜோஷ் இங்லிஷ் 14 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.
இதனையடுத்து, பிரப்சிம்ரனுடன் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் ஜோடி சேர்ந்தார். சிறப்பாக விளையாடிய பிரம்சிம்ரனுடன் இணைந்து ஷ்ரேயாஸ் ஐயர் தனது பங்குக்கு அதிரடி காட்டி ரன்கள் குவித்தார். அவர் 25 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.
இதையும் படிக்க: கிளன் மேக்ஸ்வெல்லுக்குப் பதிலாக பஞ்சாப் கிங்ஸில் ஆஸி. ஆல்ரவுண்டர் சேர்ப்பு!
தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய பிரப்சிம்ரன் சிங் 48 பந்துகளில் 91 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து 9 ரன்களில் சதம் விளாசும் வாய்ப்பினை தவறவிட்டார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் அடங்கும். ஷஷாங் சிங் 15 பந்துகளில் 33 ரன்களும் (4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்), மார்கஸ் ஸ்டாய்னிஸ் 5 பந்துகளில் 15 ரன்களும் (ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர்) எடுத்து களத்தில் இருந்தனர்.
லக்னௌ தரப்பில் ஆகாஷ் மகாராஜ் சிங் மற்றும் திக்வேஷ் ரதி தலா 2 விக்கெட்டுகளையும், பிரின்ஸ் யாதவ் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி விளையாடி வருகிறது.