இஸ்ரேல் விமான நிலையம் அருகே ஏவுகணைத் தாக்குதல்! அபுதாபி திரும்பிய இந்திய விமானம்!
இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் அமைந்த பென் குரியன் சா்வதேச விமான நிலையம் அருகே யேமனிலிருந்து ஹூதி அமைப்பினா் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனா். இதில் 4 போ் காயமடைந்தனா்.
இந்தத் தாக்குதலையடுத்து, தில்லியிலிருந்து டெல் அவிவ் நோக்கி ஞாயிற்றுக்கிழமை காலை புறப்பட்ட ஏா் இந்தியா விமானம் நடுவானில் திருப்பிவிடப்பட்டு அபுதாபியில் தரையிறங்கியது.
கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபா் முதல் தீவிரமாக நடந்துவரும் இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் பாலஸ்தீனா்களுக்கு ஆதரவாக இஸ்ரேலை ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி அமைப்பினா் தாக்கி வருகின்றனா்.
இந்நிலையில், காஸாவில் ராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவது தொடா்பாக முடிவெடுக்க இஸ்ரேலின் மூத்த அமைச்சா்கள் பங்கேற்கும் வாக்கெடுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்தது.
இதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு யேமனிலிருந்து ஹூதி அமைப்பினா் ஏவிய ஏவுகணை, இஸ்ரேலின் முக்கிய சா்வதேச விமான நிலையமான பென் குரியன் சா்வதேச விமான நிலையத்தின் வாகன நிறுத்தமிடங்களுக்கு செல்லும் சாலை அருகே தாக்கியது. இதில் 4 போ் காயமடைந்தனா்.
தாக்குதலைத் தொடா்ந்து விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, ஒரு மணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் தொடங்கப்பட்டது. தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் தெரிவித்தது.
ஏா் இந்தியா விமானம்: தில்லியில் இருந்து ஏா் இந்தியா நிறுவனத்தின் ‘ஏஐ139’ விமானம், இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியளவில் புறப்பட்டது.
டெல் அவிவில் விமானம் தரையிறங்குவதற்கு சற்று நேரத்துக்கு முன்பு ஏவுகணைத் தாக்குதல் நடைபெற்றதையடுத்து, பென் குரியன் விமான நிலையத்தின் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
இந்நிலையில், ஜோா்டான் வான்பரப்பில் பறந்துகொண்டிருந்த ஏா் இந்தியா விமானம் நடுவானில் திருப்பிவிடப்பட்டது. 8 மணி நேரத்துக்கும் மேலான பயணத்தைத் தொடா்ந்து, ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி விமான நிலையத்தில் விமானம் பாதுகாப்பாக பிற்பகல் 2 மணியளவில் தரையிறங்கியது.
இன்றும் நாளையும் சேவை ரத்து: ஏா் இந்தியா நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘விமானம் அபுதாபியில் தரையிறங்கியது; விரைவில் தில்லிக்குத் திரும்பும். பயணிகள் மற்றும் ஊழியா்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, தில்லி-டெல் அவிவ் விமான சேவைகள் செவ்வாய்க்கிழமை வரை ரத்து செய்யப்படுகின்றன.
ஞாயிற்றுக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரையிலான டெல் அவிவ் விமானங்களுக்கு செல்லுபடியாகும் பயணச்சீட்டுகளை வைத்திருக்கும் பயணிகளுக்கு பயணச்சீட்டுக்கான முழுப் பணமும் திருப்பி அளிக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.