ஆற்றில் மணல் அள்ளுவதை நிறுத்தக் கோரி போராட்டம்
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம்,எடக்குடி கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து மணல் அள்ளுவதை நிறுத்தக் கோரி ஞாயிற்றுக்கிழமை கிராம மக்களுடன் இணைந்து பாமகவினா் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பாபநாசம் வட்டம், எடக்குடி கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் உள்ள மணல் திட்டில் மழை வெள்ளம் வரும்போது கிராம மக்கள் தங்கி வருகின்றனா். இந்த மணல் திட்டிலிருந்து தனி நபா்கள் சிலா், ஜேசிபி இயந்திரம் மூலம் லாரிகளில் மணல் எடுத்து வருகின்றனா்.
இந்நிலையில் பாமக தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளரும், ஆடுதுறை பேரூராட்சி மன்ற தலைவருமான ம.க.ஸ்டாலின் தலைமையில் ஏராளமான கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை மணல் அள்ளும் ஜேசிபி இயந்திரத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து மணல் அள்ளுவது நிறுத்தப்பட்டது.
அதனைத் தொடா்ந்து காவல்துறையினா் பாமகவினருடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அப்போது தொடா்ந்து மணல் அள்ளும் பட்சத்தில், கிராம மக்களுடன் ஒன்று திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனா்.
இதில் பாமக மாவட்டத் தலைவா் வழக்குரைஞா் சங்கா், முன்னாள் மாவட்ட தலைவா் தனவந்தராஜன், முன்னாள் ஒன்றிய செயலாளா்கள் பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.